‘அந்த’ கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க ராகுல்.. அப்பதான் தெரியும் - காங்கிரஸை வறுத்தெடுத்த அமித்ஷா!
நம்சாய் (அருணாச்சல பிரதேசம்) : ராகுல் காந்தி தனது இத்தாலிய கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால்தான் பாஜக ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தெரியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசாலப் பிரதேச மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் ரூ.1,000 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமித்ஷா ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசியுள்ளார்.

அருணாசல பிரதேசத்தில் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்து வருகிறார். இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின், நம்சாய் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இத்தாலிய கண்ணாடி
அதன்பின்னர் பேசிய அமித்ஷா, கடந்த 8 ஆண்டுகளில் என்ன நடந்தது என காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டே விழித்திருக்கிறார்கள். ராகுல் காந்தி தனது இத்தாலிய கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு ஆகியோர் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் கண்ணுக்குத் தெரியும் எனப் பேசியுள்ளார்.

50 ஆண்டுகளில்
மேலும் பேசிய அமித்ஷா, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பலப்படுத்தவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளில் செய்யாத பணியை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் பெமா கண்டுவும் செய்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 9,600 போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில்
மேலும் பேசிய அமித்ஷா காங்கிரஸ் ஆட்சில் காலத்தில் இடைத்தரகர்களால் மாநிலத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்பட்டு ஊழலற்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடைத்தரகர் இல்லாத ஆட்சி முறையை பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடத்தி வருகிறது எனப் பேசினார்.


Click it and Unblock the Notifications
