காசில்லையா.. ஆம்புலன்ஸ்லாம் வராது.. இறந்த மகனை கையில் ஏந்தி சென்ற தந்தை! ஆந்திராவில் கொடூரம்
அமராவதி: பணம் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் இல்லாமல் தனது இறந்த மகனை கையில் ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் தந்தை தூக்கிச் சென்ற காட்சி காண்பவர்களின் மனதை நெகிழச் செய்கிறது.
பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, மிக துக்கமான நிலையிலும் கூட மனிதனுக்கு மனிதன் உதவி செய்யாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?
இறந்த பிறகும் கூட தனது மகனின் உடலை வருத்தாமல் கொண்டு செல்ல முடியவில்லையே என அந்த தந்தையின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.

தொடரும் அவலம்..
இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்தும் நாடு என நாம் கூறிக்கொண்டாலும், பணத்தை அடிப்படையாக கொண்ட ஏற்றத்தாழ்வு நம் நாட்டில் அதிகம் உள்ளது. உதாரணமாக, பணம் படைத்தவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியும், ஏழை மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நாட்டு மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்திலேயே இவ்வளவு பாகுபாடு என்றால், மற்ற விஷயங்களை நாம் சொல்ல வேண்டியதில்லை. உயிருடன் இருக்கும் போதுதான் இதுபோன்ற பாரபட்சம் என்றால், இறந்ததற்கு பிறகும் கூட ஏழை மக்களை இந்த பாகுபாடு விடுவதில்லை. பணம் இல்லாததால் எத்தனையோ ஏழைகள் இறந்துபோன தனது தாயையும், மனைவியையும் தோளில் சுமந்து செல்லக்கூடிய அவலத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

பாம்பு கடித்தது
அதுபோன்ற ஒரு சம்பவம்தான் ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திபகபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா (38). கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் பசவய்யா என்ற மகன் இருந்தார். அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த பசவய்யா, நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வந்ததும் தனது வீட்டுக்கு அருகே இருந்த வயல்பரப்பில் சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று பசவய்யாவை கடித்துவிட்டது.

இறந்துபோன சிறுவன்
பாம்பு கடித்ததால் வலியில் அலறித் துடித்த பசவய்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார் செஞ்சய்யா. ஆனால், அவர்களின் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அங்கு வர முடியாது என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறிவிட்டனர். இதனால் மகனை தோளில் போட்டுக்கொண்டு, சாலையில் சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அரசு மருத்துவமனைக்கு செஞ்சய்யா அழைத்துச் சென்றார். ஆனால் சிறுவன் பசவய்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தாமதமாக கொண்டு வந்ததே அவன் உயிரிழந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வரவில்லை
இந்நிலையில், இறந்துபோன மகனின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் செஞ்சய்யா கேட்டுப் பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்ட பணம் செஞ்சய்யாவிடம் இல்லை. இதனால் அவர்கள் வர முடியாது எனக் கூறிவிட்டனர். இதையடுத்து, வேறு வழியில்லாமல் தான் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மகனின் உடலை கையில் சுமந்தபடி செஞ்சய்யா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications