உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை! தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவும் அறிவிப்பு
அமராவதி: உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவித்திருந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசும், உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
மாறிவரும் வாழ்க்கை சூழல், உணவு பழக்கம் உள்ளிட்டவை மனிதர்களை முன்னெப்போதும் விட இந்த காலங்களில் அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக உடல் உறுப்புக்களின் செயலிழப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. மறுபுறம் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இப்படி உயிரிழப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படுவதன் மூலம், உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறி வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது, உறுப்பு தானம் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பு. இது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. உறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் பெரும் கொடையாளர்களை இதை விட கௌரவப்படுத்த முடியாது என்று பலரும் கூறியிருந்தனர்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஏறத்தாழ ஓராண்டு ஆகியுள்ள நிலையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது.
அதன்படி 2023 ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 16,542 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அதில் உயிருடன் உள்ளவர்கள் 15,436 பேரும், மரணம் அடைந்தவர்கள் 1099 பேர் ஆகும். கடந்தாண்டு மட்டும் 18,378 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.
இதில் 13,426 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், 4491 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 221 இதய மாற்று அறுவை சிகிச்சையும், 197 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 27 கணையம் மாற்று அறுவை சிகிச்சையும், 16 சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இறந்தபின்பு உறுப்பு தானம் செய்தவர்களை பொறுத்த வரையில் தெலங்கானாவில் 252 பேரும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தலா 178 பேரும் உறுப்பு தானம் அளித்துள்ளனர்.
இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகளை காத்திருப்பவர்களுக்கு அளிக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரையில் தமிழகத்தில் 595 அறுவை சிகிச்சைகளும், தெலங்கானாவில் 546 அறுவை சிகிச்சைகளும், கர்நாடகாவில் 471 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில், தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவிலும் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications