ஆந்திர பஸ் விபத்து: தீபாவளியைக் கொண்டாடச் சென்ற 5 ஐடி ஊழியர்கள் உடல் கருகி பலி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியானவர்களின் உறவினர்களின் கண்ணீரும், கதறலும் பார்ப்பவர்கள் மனதை ஏதோ செய்கிறது.
நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் சொகுசு பேருந்து நேற்று காலை ஆந்திர மாநிலம் மெஹபூப்நகரில் உள்ள பெங்களூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து வாகனம் எரிந்து நாசமாகியது.
இந்த விபத்தில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அவர்களின் உறவினர்களின் கதறல் பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது.

கதவை திறக்க முடியவில்லை
இந்த விபத்தில் இருந்து தப்பித்த ஒருவர் கூறுகையில், பயணிகளில் சிலர் பேருந்து தீப்பிடித்த உடன் ஜன்னலை உடைத்து வெளியேற முயன்றனர். மேலும் கதவுகளை திறக்க முடியாமல் போனதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை என்றார்.

பிணக் குவியல்
பேருந்தின் பின் புறத்தில் பிணக் குவியல்கள் கிடந்தன. இதை பார்க்கையில் பயணிகள் பேருந்தின் பின் கண்ணாடியை உடைக்க முயன்று உடல் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது.

அடையாளம்
இறந்தவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

ஐடி ஊழியர்கள்
பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த ஜோதி மஹாபத்ரா(33) என்பவர் ஹைதராபாத் சென்று அங்கிருந்து தனது ஊரான கட்டாக்கிற்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பேருந்து தீப்பிடித்ததில் அவர் இறந்துவிட்டார்.
இதே போன்று ஹைதராபாத் சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்லவிருந்த பெங்களூர் ஐடி நிறுவன ஊழியர் சக்திகாந்தும்(28) பலியானார். மேலும் ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் நன்சர்லா கிராமத்தைச் சேர்ந்த விட்டு அமரேந்தர்(29) என்ற பெங்களூர் ஐடி நிறுவன ஊழியரும் பலியானார். அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இதே பேருந்தில் பயணம் செய்த பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்த அக்ஷய் சிங்(22) மற்றும் ரூஹியா ஆகியோரும் பலியாகியுள்ளனர். அக்ஷய் ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரைச் சேர்ந்தவர். ரூஹியா மெஹதிபட்டினத்தைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications