ஆந்திராவில் பரவும் ஜிபிஎஸ் நோய்.. அடுத்தடுத்து இருவர் பலி! அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவும்! பகீர்
அமராவதி: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்போது திடீரென ஜிபிஎஸ் அதாவது குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேர் அங்கு உயிரிழந்தும் உள்ளனர்.. அதென்ன குய்லின்-பார் சிண்ட்ரோம்.. இதன் அறிகுறிகள் என்ன.. இது எப்படி பரவும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா பெருந்தொற்று எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு பல ஆண்டுகள் ஆனது.

ஜிபிஎஸ் நோய்
இதன் காரணமாக புதிய நோய் பாதிப்புகள் ஏற்படும் போது அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கிடையே நமது நாட்டில் இப்போது குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) என்ற தொற்று மெல்ல பரவி வருகிறது. இது எந்தளவுக்கு ஆபத்தானது. இதன் அறிகுறிகள் என்ன.. சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ஜிபிஎஸ் தொற்று முதலில் மகாராஷ்டிராவில் பதிவானது. அங்கு புனேவில் சிலருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலும் இந்த ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே இது மெல்லப் பரவி ஆந்திராவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் உயிரிழப்பு
கடந்த 10 நாட்களில் மட்டும் இருவர் இந்த ஜிபிஎஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 45 வயது மதிக்கத்தக்கப் பெண்ணும் 10 வயது சிறுவனும் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளதை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் உறுதி செய்துள்ளார். 45 வயது பெண் குண்டூரிலும், 10 வயது சிறுவன் ஸ்ரீகாகுளம் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சத்ய குமார் மேலும் கூறுகையில், "இதுவரை ஆந்திராவில் 17 பேருக்கு ஜிபிஎஸ் கண்டறியப்பட்டுள்ளது. . இது அவ்வளவு சீக்கிரம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது. மேலும், நமது நாட்டில் இது புதிதாகப் பரவும் நோயும் இல்லை. கடந்த காலங்களிலும் இந்த பாதிப்பு இருந்துள்ளது. இப்போது இருவர் உயிரிழந்துள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் இதனால் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
குய்லின்-பார் சிண்ட்ரோம் என்றால் என்ன
பிரெஞ்சு நரம்பியல் வல்லுநர்களான ஜார்ஜஸ் குய்லின் மற்றும் ஜீன் அலெக்ஸாண்ட்ரே பார்ரே ஆகியோரின் பெயர்களை இணைத்தே இதற்கு குய்லின்-பார்ரே நோய, சுருக்கமாக ஜிபிஎஸ் என்று பெயரிடப்பட்டது. இது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும்.. ஒருவரது சொந்த நோயெதிர்ப்பு அமைப்பே மற்ற புற நரம்புகளை வைரஸ் அல்லது பாக்டீரியா என நினைத்து அட்டாக் செய்யத் தொடங்குகிறது. அதாவது நரம்பு மண்டலத்தை வைரஸ் என நினைத்து நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்குவதே இந்த நோய்க்கு காரணமாகும்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "கொரோனா, சிக்குன்குனியா போன்ற வைரஸ் அல்லது பாக்டீரியா நோய்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு ஜிபிஎஸ் நோய் ஏற்படுகிறது. சில குழப்பங்களால் நமது நரம்பு மண்டலத்தை வைரஸ் அல்லது பாக்டீரியா என்று நோய் எதிர்ப்பு மண்டலம் தவறாக நினைத்துக் கொள்கிறது. இதனால் குழப்பம் மேல் குழப்பம் ஏற்பட ஒரு கட்டத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம் பிற நரம்புகளைத் தாக்குகிறது. இதனால் ஜிபிஎஸ் ஏற்படுகிறது" என்றார்.
அறிகுறிகள்
ஜிபிஎஸ் நோயின் அறிகுறி முதலில் கால்களில் தொடங்கும். பிறகு அது அப்படியே மேல்நோக்கி பரவும். முதலில் கால்களில் பலவீனம் அல்லது கூச்ச உணர்வு, உணர்வின்மை ஏற்படும். பிறகு தசை வலி, உடல் வலி ஏற்படும். நோய் பாதிப்பு தீவிரமடையும் போது கைகளும் பலவீனமாக மாறும். நம்மால் ஒரு காபி கப்பை கூட தூக்க முடியாமல் போகும். பேசுவதில் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். சில அரிய சூழல்களில் மரணமும் ஏற்படும்.
ஜிபிஎஸ் சிகிச்சை முறை
அதேநேரம் இந்த நோய் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது. மேலும், இதைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். எனவே, உங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் செல்வதே ஒரே தீர்வாக இருக்கும்.












Click it and Unblock the Notifications