30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்!
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பேய் நடமாட்டத்தை காரணம் காட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு லாக்டவுன் அறிவித்துள்ளார்கள்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சருபுஜ்ஜிலி தாலுக்காவில் உள்ளது வெண்ணிலவலசா கிராமம். இந்த கிராமத்தில் அடுத்தடுத்து 4 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
அவர்களுக்கு எந்த உடல்நிலை பாதிப்பும் இல்லாத நிலையில் திடீரென மர்மமான முறையில் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். இது குறித்து ஒரு மந்திரவாதியை அணுகி அவரிடம் கிராம மக்கள் விஷயத்தை சொல்லியுள்ளனர்.

மந்திரங்கள்
அவரும் சக்கரம் வரைந்து ஏதேதோ மந்திரங்களை ஜபித்து இந்த கிராமத்தில் பேய் இருப்பதாகவும் ஒரு வார காலத்திற்கு மக்கள் யாரும் வெளியே வரக் கூடாது என அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. எனவே கிராமத்தின் அனைத்து நுழைவு பகுதிகளையும் முள்வேலி போட்டு கிராமத்திற்குள் யாரும் வராதபடி மூடியுள்ளனர்.

ஒரு வாரம் காலம்
கிராம பஞ்சாயத்து அலுவலகம், அரசு பள்ளி, அரசு அலுவலகம் உள்ளிட்டவை பூட்டு போடப்பட்டு ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு லாக்டவுனில் இருக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மூடநம்பிக்கை குறித்து தகவலறிந்த ஸ்ரீகாகுளம் எஸ்பி ராதிகா தனது குழுவினருடன் கிராமத்திற்கு சென்றார்.

மூடநம்பிக்கை
அங்கு இதெல்லாம் மூடநம்பிக்கை எனவே லாக்டவுனை கைவிட்டுவிட்டு அனைவரும் இயல்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராதிகா கூறுகையில், கிராமத்தினர் யாரோ மந்திரவாதியின் பேச்சை கேட்டுக் கொண்டு இரு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.

லாக்டவுன் நீக்கம்
தற்போது நாங்கள் தலையிட்டு லாக்டவுனை நீங்கியுள்ளோம். கிராமத்திற்கே நேராக போய் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி மூட நம்பிக்கையில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என்றார். இதுகுறித்து மக்கள் கூறுகையில் எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இது போன்ற நிகழ்வுகள் உரிய சடங்கு மூலம் சரி செய்துள்ளோம்.

மக்கள் கருத்து
கொரோனா காலத்தில் எப்படி லாக்டவுனில் இருந்தோமோ அப்படி இருப்போம், ஒரு வாரம்தானே என்கிறார்கள். யாரோ மந்திரவாதி சொல்லும் மூடநம்பிக்கையை மக்கள் நம்புகிறார்கள். ஒரு வாரம் லாக்டவுன் இருந்தால் அந்த மந்திரவாதி சொல்லும் பேயெல்லாம் எங்காவது சென்றுவிடுமா என்ன? இல்லை ஒரு வாரத்தில் அந்த பேய்களை ஓட்டி ஜாடிக்குள் அடைத்து விடுவாரா? எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இது போல் மூடநம்பிக்கையை மக்கள் பின்பற்றுவதை கைவிட மாட்டார்களே!












Click it and Unblock the Notifications