'அன்பு' இருந்தால் போதும்.. எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்தலாம்! நெகிழ்ந்து பேசிய அர்னால்ட் டிக்ஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆசுவாசப்படுத்தியுள்ளது. இந்த மீட்பு பணி குறித்து ஆஸ்திரேலியாவின் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறியுள்ள வார்த்தைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநிலை: உங்களால் மரங்களை பார்க்க முடியாது, மேலே தெரியும் கல்லும் மண்ணும்தான் வானம். முகத்தில் மோதி செல்லும் தென்றல் காற்றை அனுபவிக்க முடியாது. முக்கியமாக குறிப்பிட்ட சில மீட்டர் இடத்தை தாண்டி உங்களால் வெளியே வரமுடியாது என சொன்னால் எப்படி இருக்கும்? ஆனால் இவை அனைத்தையும் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் அனுபவித்துள்ளனர்.

திட்டம்: இந்த நிலைமையில் 41 பேரில் ஒரே ஒருவர் நெகட்டிவ் சிந்தனைக்கு சென்றிருந்தாலும் கூட அது காட்டு தீ போல அத்தனை பேருக்கும் பரவி பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அனைவரும் மனம் தளராமல் இருந்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மீட்பு குழுவினர் செய்த அசாத்திய செயல்கள்தான். சுரங்கம் அமைந்திருக்கும் மலை, அந்த மலையில் இருக்கும் மண்ணின் தன்மை, குளிர், தொழிலாளர்களை மீட்க தேவையான எந்திரங்கள், இந்த எந்திரங்களில் எவையெல்லாம் தற்போது இருக்கின்றன என அனைத்தையும் ஆய்வு செய்த மீட்பு குழுவினர், தொழிலாளர்களை மீட்க சில நாட்கள் வரை ஆகலாம் என்பதை உணர்ந்தனர்.
அர்னால்ட் டிக்ஸ்: அதுவரை தொழிலாளர்கள் பதற்றமடையாமல் இருக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக சிறு குழாய் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு அனுப்பப்பட்டது. பின்னர் தொலை தொடர்பு உருவாக்கப்பட்டு, தொழிலாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் பேச வைக்கப்பட்டனர். இந்த ஐடியாவை செயல்படுத்தியது ஆஸ்திரேலியாவின் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தான். இவர் சுரங்கப்பாதை அமைப்பது, அதில் சிக்கியுள்ளவர்களை மீட்பது போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
சவால்: ஏராளமான மீட்பு பணிகளை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது இவருக்கு நன்றாக தெரியும். எனவேதான் உணவுக்கும், தொலை தொடர்புக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இவை இரண்டும் தொழிலாளர்களின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்தது. இது போன்ற சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பது முக்கியமான சவால் எனில், அவர்களை நல்ல மன நிலையுடன் மீட்பது அதைவிட பெரிய சவால். இதை டிக்ஸ் வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறார்.
அன்பு: சக உயிர்களை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் முயன்று கடைசியாக அதில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் டிக்ஸ். 17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த மீட்பு பணி குறித்து செய்தியாளர்களிடம் டிக்ஸ் பேசிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அதாவது, "தெளிவான மனம், அன்பான இதயம் இருந்தால் சாத்தியமற்றது கூட சாத்தியமாகும். அதைத்தான் நாங்கள் இங்கே செய்திருக்கிறோம்.
தந்தையாக: மீட்பு பணியில் பங்கெடுத்தது கவுரவமாக இருக்கிறது. ஒரு தந்தையாக, தொழிலாளர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு புரிதல் இருந்தது. நாங்கள் சிறந்த குழுவாக பணியாற்றினோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர். இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட அர்னால்ட் டிக்ஸ் மற்றும் மீட்பு குழுவினரை உலகமே உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications