இந்திரா காந்தியை இழுத்த பாஜக.. இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு அசாம் முதல்வர் சொன்ன அடடே காரணம்!
திஸ்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், "இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே தோல்விக்கு காரணம்" என அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. கடந்த 2003ல் இதேபோன்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதியதில் ஆஸி. வெற்றி பெற்றது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இதன் பின்னர் பைனலில் இந்தியாவுடன் ஆஸி மோதவில்லை. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பைனலில் இந்தியாவும், ஆஸியும் மோதின.

20 ஆண்டுகால தோல்விக்கு இந்தியா பழிவாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துர்திஷ்டவசமாக இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. விளையாட்டு வீரர்களை கடந்து அரசியல் கட்சியினர் மீதும் கூட குற்றம்சாட்டப்பட்டது. அதாவது பைனல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி தலையிட்டு அவர் பெயரில் கட்டப்பட்டிருக்கும் மைதானத்திற்கு போட்டி மாற்றப்பட்டது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால்தான் இந்திய அணி தோல்வியடைந்தது என குற்றம்சாட்டப்பட்டது.
அதேபோல பைனல் போட்டியில் பிரதமர் மோடி பங்கேற்றதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்திருந்தார். அதாவது பிரதமர் அதிர்ஷ்டமற்றவர் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது இப்படி பேசியது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இந்த தோல்வி குறித்து கூறுகையில், "ஐசிசி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் அதில் இந்தியா வெற்றிபெற்றிருக்கும். இந்திய அணி தொடர் முழுக்க மிகவும் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர" என விமர்சித்திருந்தார்.
அதேபோல இந்த தோல்விக்கு காங்கிரஸ் தலைவர்தான் காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதாவது, "எல்லா போட்டியிலும் வெற்றி பெற்ற நாம் ஏன் இறுதி போட்டியில் மட்டும் தோல்வியுற்றோம்? என விசாரித்தேன். இந்திரா காந்தியின் பிறந்தநாளான நவம்பர் 19ஆம் தேதி இந்த போட்டி நடந்திருக்கிறது அதனால்தான் நம்முடைய அணி தோல்வியடைந்திருக்கிறது.
தயவுசெய்து காந்தி குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளில் இந்திய அணி விளையாட வேண்டாம். பிசிசிஐயிடம் எனக்கிருக்கும் கோரிக்கையும் அதுதான்" என்று அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். வழக்கமாக நேருவையே விமர்சித்து வரும் பாஜகவினர் இந்த முறை இந்திரா காந்தியை விமர்சித்திருப்பது குறித்து சோஷியல் மீடியாக்களில் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications