அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்த யானை... மீட்க புறப்பட்டது குழு
குவஹாத்தி: அஸ்ஸாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானையை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வருவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
அஸ்ஸாமின் பிரம்மபுத்ரா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் உள்ள காசிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்த சரணாலயத்தில் இந்தியாவிலேயே ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் பலியாகிவிட்டன.

யானைகள் பரிதவிப்பு
இதேபோல் இந்த காசிரங்கா சரணாலயத்தில் யானைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பல யானைகள் நகரங்களுக்குள் நுழைந்துள்ளன.

வங்கதேசம் வரை இழுத்து செல்லப்பட்டது...
மேலும் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளத்தினால் இழுத்து செல்லப்பட்ட யானை ஒன்று வங்கதேசத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. அங்கே கூட்டத்தைப் பிரிந்ததால் அந்த யானை ஆவேசத்துடன் பொதுசொத்துகளை சேதப்படுத்தி வருகிறது.

யானையை மீட்க...
தற்போது அந்த யானையை அழைத்துவர அஸ்ஸாம் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அஸ்ஸாம் வனத்துறை குழு வங்கதேசம் செல்ல உள்ளது.

வங்கதேசம் கண்காணிப்பு...
இது குறித்து அஸ்ஸாம் மாநில முதன்மை தலைமை வன பாதுகாவலர் பிகாஷ் பிரம்கா கூறுகையில், வனத்துறை குழு டாக்கா செல்கிறது, வங்கதேச மாநில வனத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். அப்போது யானையை திருப்பி அழைத்து வருவது தொடர்பான திட்டம் வகுக்கப்படுகிறது என்றார். வங்கதேச வனத்துறை அதிகாரிகளும் இந்திய யானையின் நகர்வை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications