விறுவிறுப்பான வாக்குப்பதிவு: மத்தியப் பிரதேசத்தில் 71%, மிசோரமில்.. 82%
போபால்: மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கான நேற்றைய தேர்தலின் போது அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. இத்தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 71%, மிசோரமில் 82% வாக்குகள் பதிவாகின.
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் பைஹார், பராஸ்வாடா மற்றும் லான்ஜி ஆகிய தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
மற்ற 227 தொகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தலில் 71% வாக்குகள் பதிவாகியிருந்ததாக மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ் தெரிவித்தார்.

40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் 82% வாக்குகள் பதிவானதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அஸ்வனிகுமார் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள சால்ஃபில், துய்வால், செர்லூய் ஆகிய 3 தொகுதிகளில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகவும் இங்கு வாக்காளர்களை பயங்கரவாதிகள் மிரட்டியதாகப் புகார்கள் வந்ததாகவும் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.லாலெங்மாவியா தெரிவித்தார்.
மிசோரமில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாநிலத்தில் 6,90,860 வாக்காளர்கள் உள்ளனர். 11 அமைச்சர்கள் உள்பட 142 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதையொட்டி 1,126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 94 வாக்குச்சாவடிகள் எல்லைப் பகுதியில் அமைந்திருந்தன.
இந்த மாநிலத்தின் முதல்வர் லால் தன்ஹாவ்லா இரண்டு தொகுதிகளில் (செர்ச்சிப் மற்றும் ஹரங்துர்ஸா) போட்டியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு தேர்தலில் 32 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்போடு தேர்தல் பணியாற்றியது.












Click it and Unblock the Notifications