திருப்பதி கோயிலில் 20,000 இலவச லட்டுக்களைச் "சுட்ட" ஊழியர் சஸ்பெண்ட்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்க வேண்டிய 20 ஆயிரம் லட்டுக்களை முறைகேடு செய்ததாக ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர அன்னதான திட்டம், மருத்துவ திட்டம் உள்ளிட்ட கோயில் திட்டங்களுக்கு நன்கொடை தருபவர்களுக்கு சிறப்பு சலுகையாக வருடத்திற்கு 3 முதல் 5 நாட்கள் தங்கும் இடம், தரிசனம், லட்டு பிரசாதம் என தேவஸ்தானம் இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், இவ்வாறு இலவச லட்டுக்களை பக்தர்களுக்கு முறைப்படி வழங்காமல் தேவஸ்தான ஊழியர் வெங்கடரமணா முறைகேடு செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தன் தவறை வெங்கடரமணா ஒப்புக் கொண்டார்.
கடந்த 3 மாதங்களாக இவ்வாறு லட்டு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுவரை 20 ஆயிரத்திற்கும் லட்டுகளை பக்தர்களுக்கு வழங்காமல் முறைகேடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்தது தேவஸ்தானம்.
மேலும், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications