வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
டெல்லி: இந்தியா-வங்கதேசம் நடுவேயான நில எல்லை ஒப்பந்தம் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு செயல்படுத்தப்பட தொடங்கியுள்ளது. எனவே, இந்திய குடிமக்களாக 37 ஆயிரம்பேர் புதிதாக வர உள்ளனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றபோது ‘கிழக்கு பாகிஸ்தான்' என்று அழைக்கப்பட்ட பகுதியுடனான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. இந்திய நிலப் பகுதிக்குள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலத் திட்டுகளும், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்தியப் பகுதித் திட்டுகளும் சிக்கின. இதனால், பரஸ்பரம் இரு நாடுகளுமே எந்த வகையிலும் நிர்வகிக்க முடியாத தீவுத் திட்டுகள் பல ஏற்பட்டுவிட்டன.

எந்த ஒரு நாட்டின் சட்டப்படியான உரிமைகளையும் பெற முடியாமல், எந்த நாட்டாலும் சொந்த மக்களாகப் பார்க்கப்படாமல் வேற்றுக் கிரகவாசிகளைப் போலவே இந்தத் திட்டுவாசிகள் தனித்து விடப்பட்டார்கள். இந்தியாவுக்குச் சொந்தமான 111 நிலத் திட்டுகள் மொத்தம் 17,160 ஏக்கர்கள், வங்கதேச நில எல்லையால் சூழப்பட்டுள்ளன.
வங்கதேசத்துக்குச் சொந்தமான 51 நிலத் திட்டுகள், மொத்தம் 7,110.02 ஏக்கர்கள் இந்திய நில எல்லையால் சூழப்பட்டுள்ளன. இந்த நிலத் திட்டுகளைப் பரஸ்பரம் ஒப்படைத்துக்கொள்ளப்பட உள்ளது.
மேலும் வங்கதேச நிலப் பகுதிக்குள் சிக்கிவிட்ட 37,000 இந்தியர்கள் இந்திய நில எல்லைக்குள் குடிவருவார்கள். இந்திய நிலப் பகுதிக்குள் வசிக்கும் 14,000 பேர் இந்தியாவுடனோ, வங்கதேசத்துடனோ சேர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்கள் அனைவருமே இந்தியாவில் சேர விரும்பினாலும் அரசு அனுமதிக்க வேண்டும். இப்படிப்பட்ட நிபந்தனைகளுடன் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசமாக உருவாக்கப்பட்ட பிறகு 1974ல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராததால், இரு நாட்டு சர்ச்சைக்குரிய பகுதிகளில் வசித்த மக்களுக்கும் எந்த அரசு திட்டங்களும் போய் சேரவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வங்கதேசத்துடன் இந்தியாவின் நட்பு பலப்படுவதோடு, நடுவில் சிக்கிய மக்கள் நல் வாழ்க்கை பெறுவார்கள். அரசு திட்ட பலன்களை அந்த மக்கள் பெற முடியும். இதற்காக ரூ.3048 கோடி பேக்கேஜை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இடமாற்ற நடைமுறை இன்று தொடங்கி அடுத்த ஆண்டு, ஜூன் 30ம் தேதிவரை நடைபெறும். இடமாற்றம் செய்ய விரும்புவோருக்கு இரு நாட்டு அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும். அவர்களுக்கு தேவையான அனைத்து பயண ஆவணங்களும் ஏற்பாடு செய்து தரப்படும். கிட்டத்தட்ட 37 ஆயிரம் பேர் இந்தியாவின் புதிய குடிமக்களாக மாற உள்ளனர். ஆனால், இங்குள்ள வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 14 ஆயிரம் பேரில் ஒருவரும் வங்கதேசம் போக சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications