பாலம் இடிந்து விழுந்து இருக்கே.. இப்போ நிதிஷ் ராஜினாமா பண்ணுவாரா? சமயம் பார்த்து கேக்கும் பாஜக
பாட்னா: பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வரும் பீகாரின் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.
1,717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது.

அப்போதே பாலத்தின் கட்டுமான தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும், பாலத்தின் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் நேற்று மாலை திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. பாலம் இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணி நடைபெற்ற போதே இடிந்து விழுந்தது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பாலம் இடிந்து விழும் காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன. இதனிடையே பாலம் இடிந்து விழுந்த விவகாரம் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.ஜே.டி இடையே வார்த்தை போருக்கும் வழிவகுத்துள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவின் அமித் மாலவியா தனது ட்விட்டரில் இது தொடர்பாக கூறுகையில், " இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா? இதை செய்வதன் மூலம் நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாக அவர்கள் இருக்க முடியும்" என்றார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, " பாலத்தின் தரமற்ற பகுதிகள் கடந்த 2017 முதல் 2022 கால கட்டத்தில் கட்டப்பட்டது. அப்போது பாஜக தலைவர்கள் நந்த் கிஷோர், மங்கள் பாண்டே மற்றும் நிதின் நவீன் ஆகியோர் தான் அமைச்சர்களாக இருந்தனர்" என்று கூறியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்.ஜே.டி உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பாலம் இடிந்ததற்கு முதலில் ராஜினாமா செய்யுங்கள் என்ற ரீதியில் பாஜக விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித் மால்வியா மட்டும் இன்றி ஷெஷாத் பூன்வாலா மற்றும் ஷனாவாஸ் ஹூசைன் உள்ளிட்டோரும் நிதிஷ் குமார் அரசை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக கூறுகையில், " எதிர்க்கட்சிகள் சந்திப்பை திட்டமிடுவதில் நிதிஷ் குமார் பிசியாக இருக்கிறார். ஊழலின் பாலம் விழுந்து விட்டது. இரண்டாவது முறையாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஊழல் நடந்து இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என்று சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications