பீகாரிகள் டாய்லெட் கழுவுறாங்கன்றதை நிதிஷும் லாலுவும் ஏற்கிறார்களா?.. பாஜக எம்பி சுளீர் கேள்வி
பாட்னா: பீகார் மக்கள் டாய்லெட் கழுவுகிறார்கள் என்ற தயாநிதி மாறனின் கருத்தை நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் ஏற்கிறார்களா என பாஜக எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில் பீகாரிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வரும் இந்தி பேசுபவர்கள் கழிவறைகள், சாலைகள் ஆகியவற்றைத்தான் சுத்தம் செய்கிறார்கள் என திமுக எம்பி தயாநிதிமாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பாஜகவினரால் வேகமாக பகிரப்படுகிறது. இது குறித்து அவர் பேசுகையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இந்தி மொழியை மட்டும் படிப்பவர்கள் பிழைப்பதற்காகத் தமிழ் மொழியை கற்றுக் கொண்டு தமிழகத்திற்கு வந்து சாலை அமைத்தல், கட்டடத் தொழில், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் ஆங்கிலம் கற்றவர்கள் கைநிறைய ஊதியத்துடன் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார்கள் என பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானது. தற்போது அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பீகார் பாஜக எம்பி கிரிராஜ் சிங் கூறியிருப்பதாவது: பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜேடியு, ஆர்ஜேடி, சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.
திமுகவும் இந்த கூட்டணியில்தான் உள்ளது. நிதீஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் இந்தி பேசும் மக்கள் குறித்த தங்கள் கூட்டணிக் கட்சியின் கருத்துகளுடன் உடன்படுகிறார்களா , இந்தி பேசும் மக்கள் மீது திமுகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதை அவர் தெளிப்படுத்த வேண்டும் என கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எம்பி தயாநிதியின் பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து எம்பி தயாநிதி மாறனின் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக எப்படி சமூகநீதியை பின்பற்றுகிறதோ அதே போல் எங்களது ராஷ்ட்ரீய ஜனதா தளமும் சமூக நீதியை பின்பற்றும் கட்சியாகும்.
இந்த நாட்டில் மக்கள் எங்கு சென்றும் வேலை பார்ப்பதற்கான சுதந்திரம் உள்ளது என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும். அந்த வகையில் நாங்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறோம். இந்த விவாதத்தில் சாதிய கோட்பாட்டின் கீழ் குறிப்பிட்ட சில மக்கள் இந்த தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.
இதை எதிர்க்கும் வகையில் பேசியிருந்தால் அது சரியானதாக அமைந்திருக்கும். ஆனால் அவர் மேடையில் பதிவு செய்த கருத்து உத்தரப்பிரதேசம் , பீகாரின் ஒட்டுமொத்த மக்களின் மொழி உணர்வை கேலி செய்யும் வகையில் இழிவாகப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.
எங்கள் மக்களின் தேவை பிற மாநிலங்களில் அதிகமாக உள்ளது எங்கள் மக்கள் மற்ற மாநிலங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபடவில்லை என்றால் அந்த மாநிலங்களில் செயல்படும் தொழில்கள் ஸ்தம்பித்துவிடும் என கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தி தேசிய மொழி என கூறியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த சில காலமாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், டெங்கு, மலேரியாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அது போல் வெள்ள நிவாரண நிதிக்கு அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என கேட்டிருந்தார். அதுவும் இன்று வரை தொடர்ந்து பாஜகவினரும் மற்ற கட்சியினரும் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் தயாநிதி மாறன் இந்தி குறித்து இப்படி பேசியுள்ளதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications