பிரசாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் விலா எலும்பில் காயம்! என்ன நடந்தது?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி ஜன் சுராஜ் கட்சியின் நிறுவன தலைவரான பிரசாந்த் கிஷோர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். நேற்றைய பிரசாரத்தின்போது அதிகப்படியான தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது பிரசாந்த் கிஷோரை இடித்து தள்ளிய தொண்டர்களால் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். பீகாரை சேர்ந்தவர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். திமுக வெற்றி பெற பிரசாந்த் கிஷோரும் ஒரு காரணமாகும். அதற்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

தற்போது நடிகர் விஜயின் தவெகவின் சிறப்பு ஆலோசகராக அவர் செயல்பட்டு வந்தார். மேலும் அவர் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை பீகாரில் தொடங்கினார். வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அவர் தற்போது தவெகவின் சிறப்பு ஆலோசகர் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் பீகாரில் தற்போது பிரசாந்த் கிஷோர் ‛பத்லாவ் யாத்திரை' நடத்தி வருகிறார். நேற்றைய தினம் பீகாரின் அர்ராவில் உள்ள வீர் குன்வர் சிங் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் வாகனத்தில் வந்தார். தொண்டர்கள் அவரை மலர்தூவி வரவேற்றனர். அப்போது அதிகளவில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வாகனத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் இறங்கி மைதானத்துக்கு செல்ல முடியாத நிலை உருவானது. பிரசாந்த் கிஷோர் இறங்கி நடந்து சென்றபோது அவரை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். இதனால் பிரசாந்த் கிஷோர் மீது தொண்டர்கள் விழுந்தனர். இதில் அவர் விலா எலும்பில் காயமடைந்தோடு கூட்ட நெரிசலில் திணறிப்போனதோடு மயக்கமடையும் நிலைக்கு சென்றார்.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பிரசாந்த் கிஷோரை பத்திரமாக மேடைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. மிகவும் சோகமாக இருந்தார். விலா எலும்பில் ஏற்பட்ட வலியால் துடித்தார். இதனால் வேறு வழியின்றி அவர் பொதுக்கூட்டத்தில் பேசுவதை தவிர்த்து மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் பிரசாந்த் கிஷோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications