"பாஜகவினர் உள்ளே வரக்கூடாது” - உ.பி ஸ்டேஷனுக்கு வெளியே பேனர்.. கடைசியில் போலீசுக்கே விபூதியா?
மீரட் : பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 'பா.ஜ.கவினர் உள்ளே வரக்கூடாது' என பேனர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினருக்கு அனுமதி கிடையாது என வைக்கப்பட்டிருந்த பேனரின் கீழே அந்த ஸ்டேஷன் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. உ.பி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து இதுதான் பாஜக ஆட்சியின் நிலை என விமர்சித்துள்ளார்.

உ.பியில் பேனர்
பா.ஜ.கவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மீரட் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பா.ஜ.கவினர் காவல் நிலையத்திற்குள் நுழைய தடை விதித்து பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காவல் நிலையத்திற்கு வெளியே அந்த ஸ்டேஷனின் அதிகாரி பெயரில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

பாஜகவினர் வர தடை
இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில், 'பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலைய அதிகாரியின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

அகிலேஷ் யாதவ் ட்வீட்
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அந்த பேனர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'ஐந்தாறு ஆண்டுகளில் முதல்முறையாக, ஆளும் கட்சியினர் காவல் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் உ.பியில் பாஜக ஆட்சியின் நிலை' என விமர்சித்திருந்தார்.

மர்ம நபர்கள்
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சவுத்ரி கூறுகையில், அடையாளம் தெரியாத சிலரால் காவல் நிலையத்திற்கு வெளியே இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்
அந்த பேனர் வைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பழைய சொத்து தகராறு தொடர்பாக இரண்டு பிரிவினர் அந்த காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர்தான் அந்த பேனரை வைத்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications