பாஜகவுக்கு தாவினாலும் கைவிடாத சேரைகெல்லா தொகுதி மக்கள்! 6ஆவது முறை எம்எல்ஏவான சம்பய் சோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சம்பய் சோரன், பாஜக சார்பில் சேரைகெல்லாவில் போட்டியிட்ட நிலையில் ஜேஎம்எம் கட்சி வேட்பாளர் கணேஷ் மஹாலியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக 38 தொகுதிகளுக்கும் கடந்த நவ.20 சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 67.74 சதவீதம் ஆகும். இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளராக கருதப்படுபவர் சம்பய் சோரன். இவர் மாநில முதல்வராக 6 மாதங்கள் பயணித்தார்.
67 வயதாகும் சம்பய் சோரன் போக்குவரத்து துறை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நலத் துறை அமைச்சராக இருந்துள்ளார். 1990களில் பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிந்து தனி மாநிலம் உருவாவதில் பாடுபட்டார். இவர் சேரைகெல்லா தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
1995 - 2000, 2005- 2009, 2009- 2014, 2014- 2019, 2019- 2024 ஆகிய ஆண்டுகளில் இவர் எம்எல்ஏவாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் ஹேமந்த்தின் தந்தை சிபு சோரனுடன் பணிபுரிந்தாலும் 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் சேரைகெல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைதான நிலையில் மாநில முதல்வராக மனைவி கல்பனா சோரனை நியமிக்க இருந்தது. ஆனால் ஜேஎம்எம் கட்சியின் எம்எல்ஏக்கள் சில எதிர்பார்ப்பால் அவருக்கு பதில் சம்பய் சோரன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
கடந்த ஜூலை மாதம் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். வெறும் 5 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்த சம்பய் சோரனுக்கு அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் அவர் 4 ஜேஎம்எல் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் ஐக்கியமானார்.
இவருக்கு அதே சேரைகெல்லா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக வழங்கியது.ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் சம்பய் சோரன், 5 முறை எம்எல்ஏவாக இருந்த சொந்த தொகுதியிலேயே ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்து வந்தார். சேரைகெல்லா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவரை எதிர்த்து , ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த கணேஷ் மஹாலி போட்டியிருந்தார். கணேஷ் மஹாலி பாஜக ஆதரவாளராக இருந்து தற்போது ஜேஎம்எம் கட்சியில் இருந்து வருகிறார்.
அது போல் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சம்பய் சோரன். இவர்களது கட்சித் தாவல்களால் வாக்காளர்கள் குழம்பியிருப்பார்களோ என்ற கேள்வி எழுந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் சம்பய் சோரன், பின்னடைவை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெற்றார்.
மொத்தம் 16 சுற்றுகள் முடிவில் சம்பய் சோரன் 119379 வாக்குகளை பெற்று வென்றார். அது போல் ஜேஎம்எம் கட்சியின் கணேஷ் மஹாலி 98032 வாக்குகளை பெர்ரு தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications