நெருக்கம் காட்டும் பாஜக, காங்கிரஸ்.. ரெண்டு லட்டு தின்னும் ஆசையில் அதிமுக..!
டெல்லி: அதிமுகவின் ஆதரவை பெறுவதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் மேலிடங்கள் இரண்டுமே போட்டிப் போட்டுக் கொண்டுள்ளன. இறுதியி்ல் எந்த பக்கம் கை ஓங்குகிறது என்பது ஜெயலலிதா எடுக்கும் முடிவை பொறுத்து அமைய உள்ளது.
ஜெயலலிதாவின் விடுதலை தீர்ப்பால், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருந்த திராவிட கட்சிகள் அல்லாத பிற கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம், ஆனால், ஜெயலலிதாவுடன் இணக்கம் காட்ட அவை போட்டி போட தொடங்கியுள்ளன.

நாடாளுமன்றத்தில் இனிப்பு
நாடாளுமன்றத்தில் நேற்று, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்.பிக்கள், காலை முதல் தொலைக்காட்சி சேனல்களை பார்ப்பதில் நேரம் செலவிட்டு வந்தனர். ஜெயலலிதா விடுதலையானார் என்ற செய்தி வெளியானதும், உடனடியாக எம்.பிக்கள், இனிப்புகள் வாங்கிவர ஆர்டர் கொடுத்தனர். இந்த இனிப்புகளை, பிற கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி
பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களும், தடையேதும் சொல்லாமல் இனிப்புகளை வாங்கி சாப்பிட்டனர். அதிமுகவை பொறுத்தளவில், லோக்சபாவில், பாஜக மற்றும் காங்கிரசுக்கு அடுத்தபடியாக 3வது பெரிய கட்சியாக உள்ளது. ராஜ்யசபாவில் 11 எம்.பிக்களை வைத்துள்ளது.

ராஜ்யசபாவில் தயவு தேவை
ராஜ்யசபாவிலுள்ள அந்த 11 எம்.பிக்களின் ஆதரவும் பாஜகவுக்கு பல்வேறு விவகாரங்களில் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ஏனெனில், ராஜ்யசபாவில் பாஜக இன்னும் முழு பெரும்பான்மை பெறவில்லை. எனவே, சர்ச்சைக்குறிய சட்டங்ககளை, எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் முடக்கிவிடும் வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த அதிமுக போன்ற உதிரி கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. எனவே அதிமுகவுடன் நெருக்கம் வைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. ஜெயலலிதா தண்டனை காலத்தில் இருந்தபோது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அவரை வீட்டில் வந்து சந்தித்ததும், ராஜ்யசபா பிரச்சினைக்காகவே.

காங்கிரசுக்கும் தேவை
அதேநேரம், ராஜ்யசபாவில், பாஜகவிடம் அதிமுக நெருங்க கூடாது என்பது காங்கிரஸ் விருப்பம். லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையுடன் உள்ள பாஜக, நிறைவேற்றும் சர்ச்சைக்குறிய சட்டங்களை, ராஜ்யசபாவில் முடக்கி, பாஜகவுக்கு ஷாக் கொடுக்க வேண்டுமானால், அதிமுக சப்போர்ட் காங்கிரசுக்கு தேவை. இதை கருத்தில் கொண்டு அதிமுகவை வளைத்து போட காங்கிரஸ் முயலுகிறது.

மேல்முறையீடு அரசியல்
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில், கர்நாடக அரசுதான், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. எனவே, மேல்முறையீடு செய்வதா, வேண்டாமா என்பதை அதிமுகவிடம், அக்கட்சி காட்டும் நெருக்கம் முடிவு செய்யும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள். எனவேதான், கர்நாடக அரசு, இதுவரை, மேல்முறையீடு விவகாரத்தில் எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக உள்ளதாம்.

ரெண்டு லட்டு திங்க ஆசையா
அதேநேரம், அதிமுகவுக்கு, கொண்டாட்டம். மத்தியில் ஆளும் கட்சியும், மத்திய எதிர்க்கட்சியும், தங்கள் தயவுக்காக காத்திருப்பதை லாவகமாக பயன்படுத்திக்கொண்டு, பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதை போல, இரு கட்சிகளிடமும் நெருக்கம் காட்ட அதிமுக காய் நகர்த்தும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications