100 "லட்சிய" தொகுதிகள்.. தலைகீழாக மாறப்போகும் உத்தரபிரதேசம்..அதிரடி திட்டத்தை அறிவித்த முதல்வர் யோகி
உத்தரப் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வளர்ச்சிகளை சாத்தியப்படுத்த 100 லட்சியத் தொகுதிகளில் கவனம் செலுத்துகிறது பாஜக
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட 100 தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதிகளை மாநிலத்தின் மற்ற தொகுதிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவதே இதன் திட்டமாகும்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும் சிந்தாமல் சிதறாமல் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது, அதன் பின்னர் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கியது போன்றவை இதன் வெளிப்பாடுதான்.

இப்படி இருக்கையில், உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதுவும் பட்ஜெட்டில் பேசப்பட்ட விஷயம்தான். அதாவது நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியிருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்டதைப் போல 100 தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "நாடு தன்னிறைவு பாதையில் பணிக்க தொடங்கியிருப்பதை போல மாநிலமும் இதே பாதையில் சீராக பயணிக்க தொடங்கியுள்ளது. ஆனால் இந்த மாற்றம் வானத்திலிருந்து வராது. அதை நாம்தான் சாத்தியமாக்க வேண்டும். எனவே, முதலில் நமது கிராமங்களை தன்னிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும். பின்னர் நகரங்களும், அதைத் தொடர்ந்து மாநிலமும் தன்னிறைவு பெற்றதாக மாறிவிடும். எனவே இதற்காக 100 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த 100 தொகுதிகள் முன்மாதிரியாக இருக்கும்.

இந்த தொகுதிகளில் கல்வி, சுகாதார வசதிகள் இத்துடன் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் சமூக நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களை அதிகாரிகள் தவறாமல் ஆய்வு செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் மூலம் தனிநபரின் வருமானம் உயரும். மிகச்சரியாக சொல்வதெனில் மனிதவளத்தின் 75 குறியீடுகளை இந்த தொகுதிகள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் ஏற்படும் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டு இதர தொகுதிகள் மேம்படுத்தப்படும். இது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும். முதலீட்டாளர்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். அவற்றை பயன்படுத்திக்கொள்ள நாமும் தயாராக வேண்டும்.
அந்த வகையில் இந்த முன்மாதிரி தொகுதிகள் 'லட்சிய தொகுதிகள்' என்று அழைக்கப்படும்" என யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். ஏற்கெனவே மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால் டபுள் என்ஜின் அரசு மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் என பாஜக கூறி வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications