தேர்தல் அறிக்கையைகூட வெளியிட முடியாத பாஜக 'சார்ஜ்ஷீட்' வெளியிட்டது!!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட வெளியிட முடியாத நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை (சார்ஜ்ஷீட்) பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாகுப் பதிவு ஏப்ரல் 7-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக வாக்குப் பதிவுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

ஓட்டு போடும் நாளில் தேர்தல் அறிக்கை
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ முதல் கட்ட வாக்குப் பதிவின்போதுதான் தேர்தல் அறிக்கையையே வெளியிடுவதாக கூறியிருக்கிறது. அதுவும் கூட ஏன்?ஏன்? ஏன்? இவ்வளவு தாமதம் என்று எதிர்க்கட்சிகள் குடைந்தெடுத்து மானத்தை வாங்கிய பின்னர்தான் பாஜக இந்த அறிவிப்பையும் கூட வெளியிட்டது.

சார்ஜ்ஷீட் வெளியீடு
இந்த நிலையில்தான் காங்கிரஸ் மீதான குற்றப்பத்திரிகை என்ற தலைப்பில் பாஜக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இன்று இந்த குற்றப்பத்திரிகையை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக...
அட்லீஸ்ட் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட முடியாத வகையில் பாஜக தலைவர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை எதிர்கொள்ளும் வகையிலேயே இந்த குற்றப்பத்திரிகையை பாஜக வெளியிட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்?
பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தியது, பொருளாதாரத்தை சீர்குலைத்தது, எண்ணிலடங்கா ஊழல்கள், தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கை, சுகாதார திட்டங்களில் முறைகேடு, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை சீர்குலைத்தது என்பது உள்ளிட்ட தலைப்பில் பாரதிய ஜனதாவின் இந்த சார்ஜ்ஷீட் வெளியிடப்பட்டுள்ளது.

சாக்கு போக்கு..
அதாவது நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொண்டே.......... இருக்கிறோம் என்று சொல்லும் வகையில்தான் பாஜகவின் இந்த சார்ஜ்ஷீட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications