கண்களில் வடிந்த ரத்தம்.. கொல்கத்தா பெண் டாக்டரின் தாய் கதறல்.. உண்மையை மறைக்கும் மம்தா பானர்ஜி?
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பயிற்சி பெண் டாக்டரின் தாய் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு தனது மகளுக்கு நேர்ந்த துயரம் குறித்து அவர் கண்ணீர் மல்க திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து அதிர வைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வரும் மாணவி பயிற்சி டாக்டராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் நைட் ஷிப்டில் பணியாற்றினார்.

அதன்பிறகு அவர் ஓய்வறைக்கு சென்று படுக்க சென்றார். இந்நிலையில் தான் அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார். உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் கூட கொல்கத்தாவில் பதற்றமான சூழல் தான் உள்ளது.
இந்நிலையில் தான் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டரின் தாய் அன்று நடந்த சம்பவம் பற்றி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛முதலில் எங்களுக்கு மருத்துவமனையில் இருந்து போன் செய்தனர். அப்போது எங்களின் மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டனர். இதையடுத்து மீண்டும் நான் போன் செய்து என்ன நடந்தது? என்று கேட்டேன்.
அப்போது அவர்கள் மருத்துவமனைக்கு வரும்படி கூறினர். வேறு எதையும் சொல்லவில்லை. இதையடுத்து மீண்டும் நாங்கள் போன் செய்து பேசினோம். அப்போது உதவியாளர் என அடையாளப்படுத்தி கொண்டு பேசியவர் எங்களின் மகள் தற்கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.
என் மகள் கடந்த 8 ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால் எங்களுக்கு மறுநாள் இரவு 10.53 மணிக்கு தான் போன் வந்தது. இதையடுத்து நாங்கள் மருத்துமனைக்கு சென்றோம். எங்களின் மகளை பார்க்க அனுமதிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு தான் பார்க்க அனுமதித்தனர். அப்போது கண்ட காட்சி எங்களை கதறி அழ வைத்தது.
என் மகளின் பேண்ட் திறந்து இருந்தது. அவளது உடலில் ஒரேயொரு துணி மட்டுமே இருந்தது. அவளது கை உடைந்து இருந்தது. கண்கள், வாயில் இருந்து ரத்தம் வந்திருந்தது. அவளை பார்த்தபோது யாரோ கொலை செய்ததை உணர்ந்தேன். இதனால் என் மகள் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று கூறினேன். எங்களின் மகளை டாக்டராக்க அதிக கஷ்டத்தை சந்தித்தோம். ஆனால் இப்போது அவள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளியை விரைவில் பிடிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வரை எதுவும் நடக்கவில்லை. ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதை என்னால் கூற முடியும். என்னை பொறுத்தவரை என் மகள் சாவுக்கு அனைத்து துறைகளும் பொறுப்பு.
மாநில காவல்துறை சரியாக பணி செய்யவில்லை. மேலும் மம்தா பானர்ஜியும் போராட்டத்தை நிறுத்த தான் முயற்சி செய்கிறார். இதனால் தான் மருத்துவமனையை சுற்றி 144 தடை உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. முடிந்தவரை இந்த வழக்கை சீக்கிரமாக முடித்து வைக்க முயற்சிக்கின்றனர். விரைவில் உடற்கூறாய்வு செய்து உடலை ஒப்படைப்பதில் தான் மும்முரமாக உள்ளனர்'' என்று கண்ணீர் மல்க கூறினார்.












Click it and Unblock the Notifications