சீன பயணத்தின்போது எல்லை பிரச்சனை குறித்து பேசும் மன்மோகன் சிங்
டெல்லி: சீன பயணத்தின்போது எல்லை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் 5 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கிளம்பியுள்ளார். ரஷ்யாவுக்கு கிளம்பும் முன்பு பிரதமர் கூறுகையில்,
இந்தியா மற்றும் சீனா இடையே சில வரலாற்று பிரச்சனைகள் உள்ளன. இந்த பிரச்சனைகள் இரு நாட்டுக்கு இடையேயான நட்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை பாதிக்காமல் இருக்க அவற்றை பக்குவத்துடன் இரு நாட்டு அரசுகளும் அணுகி வருகின்றன.

சீன பயணத்தின்போது இந்த பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு தலைவர்களிடம் பேசுவேன். எல்லையில் அமைதி காக்க இந்தியா மற்றும் சீனா இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான நமது உறவு தனித்தன்மை வாய்ந்தது. பாதுகாப்பு, அணு சக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு உள்ளது என்றார்.
சிங் நாளை மாஸ்கோவில் நடக்கும் 14வது வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும் கலந்து கொள்கிறார்.
பிரதமரின் சீன பயணத்தின்போது எல்லை பிரச்சனை குறித்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் புதன்கிழமை மன்மோகன் சிங்கிற்கு சீன பிரதமர் லி கெகியாங் மதிய விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து அன்று இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங் சிங்கிற்கு விருந்து கொடுக்கிறார்.












Click it and Unblock the Notifications