தாலி கட்ட 15 நிமிசத்துக்கு முன் மணமகன் மடியில் விழுந்து இறந்த மணப்பெண்.. ஆந்திராவில் அதிர்ச்சி
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தாலி கட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மணமகன் மடியில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாகுளம் ஜலமுருவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜனா (22). இவர்களது குடும்பம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதரபாத்திலிருந்து ஸ்ரீகாகுளம் வந்தது. ஸ்ரீஜனா பிகாம் பட்டதாரி.
இவருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டார் மாப்பிள்ளை பார்த்தனர். அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் ஒரு சம்பந்தம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த 7ஆம் தேதி திருமணம் என நிச்சயமிக்கப்பட்டது.

திருமணம்
இதையடுத்து திருமணத்திற்காக மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த அறையில் ஸ்ரீஜனா குடும்பத்தினர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீஜனாவுக்கு வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குளுகோஸ்
பின்னர் ஸ்ரீஜனாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. இதையடுத்து அவர் குணமான மாதிரி உணர்ந்ததால் அன்று மாலை வரவேற்பில் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு தாலி கட்டும் சடங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கான சடங்குகளை செய்துக் கொண்டிருந்தனர்.

15 நிமிடத்தில் தாலி
இன்னும் 15 நிமிடத்தில் மணமகன் கட்டும் தாலி ஸ்ரீஜனா கழுத்தில் ஏறியிருந்திருக்கும். ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது. சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போதே அந்த மணமகள், மணமகன் மடியில் விழுந்தார். உடனே அந்த பெண்ணை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உடல்நிலை மோசம்
ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமடைந்ததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு உயிரிழந்தார். ஸ்ரீஜனா ஏதேனும் விஷம் சாப்பிட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.

ஸ்ரீஜனாவின் பெற்றோர்
இதையடுத்து ஸ்ரீஜனாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மாதவிடாய் தள்ளி போவதற்காக 3 நாட்களுக்கு ஸ்ரீஜனா மாத்திரை போட்டதாக தெரிகிறது. மேலும் அவரது ஹேண்ட் பேக்கில் விஷத்தன்மை கொண்ட பழத்தின் கொட்டைகள் இருந்தன. இதுகுறித்து ஸ்ரீஜனாவின் பெற்றோரிடம் கேட்ட போது அவரது விருப்பத்தின் பேரில்தான் திருமணம் நடைபெற்றது என்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications