ஐசியூவில் இருக்கும் நபருக்கு ஆஸ்பத்திரியிலேயே திருமணம்; மருத்துவர்கள் வாழ்த்து
ஜெய்ப்பூர்: சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த மணமகனை மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிக்கொண்டார் மணமகள். வித்தியாசமான இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் தல்வாண்டி பகுதியை சேர்ந்தவர் ரவிமீனா. இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ம்தேதி திருமண நாள் குறிக்கப்பட்டது.

திருமண தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு, ரவிமீனா பைக்கில் சென்றபோது மற்றொரு வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ரவிமீனா, எழுந்து நடக்க ஒன்றரை மாதம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
மணப்பெண்ணின் ராசிதான் இந்த விபத்துக்கு காரணம் என்று மாப்பிள்ளை வீட்டார் பேசத்தொடங்கினர். இந்நிலையில் தடாலடியாக மணப்பெண் வீட்டார் ஒரு முடிவு செய்தனர். ரவிமீனா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் வைத்தே திருமணத்தை முடிக்க திட்டமிட்டனர்.
இதன்படி மணப்பெண்ணுடன் மருத்துமவனைக்கு சென்ற உறவுக்காரர்கள், அங்கேயே ஹோமகுண்டத்தை வளர்த்து திருமண ஏற்பாடுகளை செய்தனர். வேதமந்திரங்கள் முழங்க படுக்கையில் அமர்ந்தபடி மணப்பெண்ணுக்கு தாலிகட்டினார் ரவிமீனா. மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து மணமக்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து மணப்பெண் கூறுகையில்: திருமணம் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து அவருக்கு பணிவிடைகள் செய்ய முடிவு செய்தேன். அப்போதுதான் அவர் விரைவில் குணமடைவார் என்பதால் உடனடியாக திருமணம் செய்துகொண்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications