பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுக்கும் வகையில் தான் ஃபேப்இந்தியாவில் கேமரா இருந்தது: போலீஸ்
பனாஜி: கோவாவில் இருக்கும் ஃபேப்இந்தியா துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த கேமரா உடைமாற்றும் அறையில் பெண்களை படம் எடுக்கும்படி வைக்கப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவின் கன்டோலிம் நகரில் உள்ள ஃபேப்இந்தியா துணிக் கடைக்கு சென்றார். அங்கு துணி வாங்கிய அவர் அதை போட்டுப்பார்க்க உடைமாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அவர் அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை கண்டுபிடித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்து, ஊழியர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த 4 பேரும் சனிக்கிழமை மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், உடை மாற்றும் அறைக்கு வெளியே தான் கேமரா இருந்தது என்றார்.
அப்போது குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஃபேப்இந்தியாவின் கன்டோலிம் கிளையில் உள்ள கேமரா பெண்கள் உடைமாற்றுவதை படம்பிடிக்கும் வகையில் தான் வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உடை மாற்றுவதை பார்க்கும் எண்ணத்தில் கடை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் கேமராவை அவ்வாறு வைத்துள்ளனர். அந்த கேமரா பற்றி அறியாமல் பல பெண்கள் உடை மாற்றியுள்ளனர். பெண்கள் உடை மாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோவை கடை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
அந்த கடையில் துணி வாங்கி அதை போட்டுப்பார்த்த பெண்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 ஊழியர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடையின் மேனேஜர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications