லேசாக இறங்கி வந்தது மே. வங்க அரசு! அதிகாரிகளை மாற்ற ஒப்புதல்!!
கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று 8 அதிகாரிகளை இடம் மாற்ற செய்ய மேற்கு வங்க மாநில அரசு ஒருவழியாக ஒப்புக் கொண்டது. ஆனாலும் அதிகாரிகளை எங்கே இடம்மாற்றம் செய்வது என்பதை நாங்களே முடிவு செய்வோம் என்கிறது மேற்கு வங்க அரசு.
லோக்சபா தேர்தலையொட்டி மாநில நிர்வாகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மாநிலங்களில் புகார்களுக்குள்ளாகும் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

மேற்கு வங்கத்திலும் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என 8 பேரை மாற்ற வேண்டும் என்று நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. ஆனால் அப்படியெல்லாம் அதிகாரிகளை மாற்ற முடியாது.. முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.. சிறைக்குப் போகவும் தயார் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி சவால்விட்டார்.
இதனால் அங்கு சிக்கல் எழுந்தது. மேற்கு வங்க மாநில அரசு தங்களது உத்தரவை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தது. அதனால் பிற்பகல் 2.30மணிக்குள் அதிகாரிகளை மாற்றியாக வேண்டும் என்று கெடுவும் தேர்தல் ஆணையம் விதித்தது.
கெடு விதிப்பு.. தேர்தல் ..ரத்து.
ஆனால் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலர், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில் தேர்தல் ஆணையம் கோரியபடி அதிகாரிகளை மாற்றினால் நிர்வாகச் சிக்கல்கள் எழும். அதனால் அதிகாரிகளை மாற்றும் முடிவை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கெடுவை நிராகரித்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மேற்கு வங்க மாநில அரசு நடைமுறைப்படுத்தாமல் போனால் அங்கு சர்ச்சைக்குரிய இடங்களில் லோக்சபா தேர்தலையே ரத்து செய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் 8 அதிகாரிகளை இடம் மாற்ற மேற்கு வங்க அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்த அதிகாரிகளை எங்கே இடம் மாற்றம் செயது என்பதை நாங்களே முடிவெடுப்போம் என்றும் கூறியிருக்கிறது மேற்கு வங்க அரசு.












Click it and Unblock the Notifications