காவிரியில் தண்ணீர் திறப்பு- பெங்களூருவில் சாதாப்தி ரயில் மறிப்பு- 3வது நாளாக முடங்கிய போக்குவரத்து
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் 3வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சாதாப்தி ரயிலை மறித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா - தமிழகம் இடையே 3வது நாளாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ப தினசரி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணியில் இருந்து 5ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்,காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணராஜசாகர் அணை முன் கர்நாடக அமைப்பினர் மற்றும் அம்மாநில விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் தண்ணீரில் இறங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பந்தங்களுடன் அவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அணையில் பாதுகாப்பு
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் வலுத்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணை முன் 1500 துணை ராணுவ படையினர் மற்றும, மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று கபினி அணை முன் 600 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு
கர்நாடக ஆளுநர் மாளிகை மற்றும் விதான்சவுதா போன்ற முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவிரி நீராதாரத்தை காப்பாற்ற மறுத்த சித்தராமையா பதவி விலக கோரி இன்று முதல் போராட்டம் நடத்த அம்மாநில பாஜக திட்டமிட்டுள்ளது.

மூன்றாவது நாளாக வன்முறை
மாண்டியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். சாலைகளில் டயர்களை கொழுத்தி மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இன்று முன்றாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் போராட்டம் காரணமாக கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அம்மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.
|
ரயில் மறியல்
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் 3வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சாதாப்தி ரயிலை மறித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை மறியல்
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்பேட்டைஉள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், காவிரி பாதுகாப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

3வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
நீர் திறப்பு விவகாரத்தால் கர்நாடகத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 3வது நாளாக தமிழகம் - கர்நாடகா இடையே சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

பயணிகள் சிரமம்
3 நாள்கள் தொடர் விடுமுறையில் தமிழகத்துக்கு வந்த கர்நாடக மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்கள் பெங்களூரு செல்ல முடியாமல் ஒசூரில் தவித்தனர். நேற்றைய தினம் அத்திப்பள்ளிவரை நடந்து சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலப் பேருந்துகளில் சென்றனர். இன்றும் பேக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications