கேஜ்ரிவால் செயலாளர் ராஜேந்திரகுமார் வீட்டில் ரொக்கம், ஆவணங்கள் சிக்கின... எந்நேரத்திலும் கைது?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் தனிச்செயலரும் டெல்லி அரசின் தற்போதைய முதன்மை செயலாளருமான ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகாரைத் தொடர்ந்து அவரது வீடு உட்பட மொத்தம் 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து ரூ2.4 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கிய நிலையில் அவர் எந்த நேரத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

டெல்லி அரசில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜேந்திர குமார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் தனிச்செயலராக இருந்தவர். கடந்த மே மாதம் இவரை முதன்மைச் செயலராக்கினார் முதல்வர் கேஜ்ரிவால்.
ஆனால் ராஜேந்திரகுமார் மீது கிரிமினல், ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது நியமனத்தை ஆளுநரும் மத்திய அரசும் ஏற்க முடியாது என நிராகரித்திருந்தன. ராஜேந்திரகுமார் இடத்துக்கு மற்றொரு அதிகாரியை மத்திய அரசு தானே நியமித்தது.
இந்த குழப்பங்களுக்கு இடையே ராஜேந்திரகுமார் மீதான ஊழல் வழக்கை கையிலெடுத்த சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி தலைமைச் செயலகம், ராஜேந்திர குமார் வீடு உட்பட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து ரூ2.4 லட்சம் ரொக்கமும் ஏராளமான ஆவணங்களும் சிக்கின. மேலும் ரூ3 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச் சோதனையின் முடிவில் ராஜேந்திரகுமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications