ஷாக்! வெளி மாநிலமா? நீட் பாஸ் உறுதி- ரூ10 லட்சத்தில் முடிக்கலாம்..கூவி கூவி அழைத்த குஜராத் கும்பல்!
அகமதாபாத்: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத்தில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் ஏன் தேர்வு எழுதினர் என்பதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தன. நீட் தேர்வின் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் நீட் முறைகேடுகள் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 18-ந் தேதி நடைபெறும்.
இந்த நிலையில் குஜராத்தில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் பிற மாநில மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத்தின் சில தேர்வு மையங்களின் பள்ளிகளின் உரிமையாளர்கள்தான் நீட் மோசடி கும்பலின் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள்தான் சொற்ப விலைக்கு நீட் மாணவர்களிடம் பேரம் பேசியிருக்கின்றனர். அத்துடன் பிற மாநில மாணவர்களுக்கு குஜராத் போலி முகவரிகளை ஏற்பாடு செய்து கொடுத்து விண்ணப்பிக்க வைத்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கவும் செய்திருக்கின்றனர். குஜராத்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்கும்.. ஆனால் தேர்வு மையமே மோசடியாளர்கள் கூடம்தானே.. அவர்கள் அப்படியே விடைகளை சொல்ல பணம் கொடுத்தவர்கள் பதில் எழுதப் போகிறார்கள். இதற்கு வெறும் ரூ10 லட்சம் மட்டும் வசூல் செய்துள்ளனர்.
குஜராத்தின் வதோதரா உள்ளிட்ட பல பெரு நகரங்களின் பள்ளிகளில் இத்தகைய மோசடிகள் பெருமளவு நடந்திருக்கிறது; ஆனால் சில பள்ளிகள்தான் சிக்கி இருக்கின்றன; பெரும்பாலான பள்ளிகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
சிபிஐ நடத்திய விசாரணையின் அறிக்கை நீதிமன்றத்தில் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கூடுதல் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் பின்னராவது நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் என்பது மாணவர்கள் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications