வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு
போபால்: சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளதால் மத்திய அரசே வேக்சின் வாங்கி கொடுக்க வேண்டும், மாநில அரசுகள் அதற்கு உரிய பணத்தை கொடுக்கும் என்று ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுக்க தற்போது மிகப்பெரிய அளவில் வேக்சின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மத்திய அரசு போதிய வேக்சின்களை ஆர்டர் செய்யாத காரணத்தால், மாநிலங்களுக்கு வேக்சின் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச அளவில் வேக்சின் டெண்டர்களை விட்டு உள்ளன.
ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு வேக்சின் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இதனால் மாநில அரசுகள் வேக்சின் பெறுவது பெரிய சிக்கல் ஆகியுள்ளது.

மத்திய அரசு
மாறாக மத்திய அரசுடன் மட்டுமே வேக்சின் விற்பனையை மேற்கொள்வோம் என்று கூறிவிட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசும் இதேபோல் வேக்சின் வாங்குவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விட்டு இருந்தது. ஆனால் ராஜஸ்தான் அரசின் இந்த டெண்டரில் வேக்சின் நிறுவனங்கள் பல அதிக தொகை கேட்டு இருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் உள்ள தொகையை விட அதிக தொகைக்கு மட்டுமே வேக்சின் கொடுப்போம் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன.

9 நிறுவனங்கள்
மொத்தம் 9 நிறுவனங்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு டெண்டர் தொகையை தெரிவித்துள்ளது. ஆஸ்டர்செனகா வேக்சினை விற்கும் சில நிறுவனங்களும் இதற்கு பதில் அளித்துள்ளது. எல்லா நிறுவனங்களும் மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கே வேக்சின் கொடுப்போம் என்று கூறியுள்ளன. இதனால் ராஜஸ்தான் சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்க வேண்டுமா என்ற யோசனையில் உள்ளது.

யோசனை
ராஜஸ்தான் அரசு சார்பாக வேக்சினுக்காக ரூ. 3000 கோடி உள்ளது. அரசின் வளர்ச்சி திட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ரூ.3000 கோடியை இதற்கு என்று தனியாக ஒதுக்கும் முடிவில் ராஜஸ்தான் அரசு உள்ளது. ஆனாலும் சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்குவது சிக்கல் என்று அம்மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா, சர்வதேச டெண்டர்களை மத்திய அரசுதான் விட வேண்டும்.

மத்திய அரசு
மாநில அரசுகளை விட மத்திய அரசு குறைந்த விலைக்கு வேக்சின் வாங்க முடியும். வேக்சின் நிறுவனங்களின் நம்பக தன்மையையும் மத்திய அரசுதான் தூதரகம் மூலம் சோதிக்க முடியும். அதேபோல் இந்தியா நிறுவனங்களில் இருந்து மத்திய அரசு 150 ரூபாய்க்கு ஒரு டோஸ் வாங்கும் போது, நாங்கள் ஏன் கூடுதல் விலைக்கு வேக்சின் வாங்க வேண்டும்? மத்திய அரசே எங்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.

நிதி
எங்களுக்கு இதுவரை 12.66 லட்சம் வேக்சின் வந்துள்ளது. இப்போது இருக்கும் வேக்சினை வைத்து எங்கள் மாநிலத்தில் 7 கோடி பேரில் 4 கோடி பேருக்கு வேக்சின் கொடுக்க முடியாது. இதனால் தற்காலிகமாக வேக்சின் அளிப்பதை நிறுத்தி இருக்கிறோம். நாங்கள் பாரத் பயோடெக், சீரம் நிறுவனத்திற்கு 59 கோடி ரூபாய் கொடுத்தும் கூட எங்களுக்கு சரியாக வேக்சின் வழங்கப்படவில்லை.

மத்திய அரசு
இதனால் வேக்சின் வழங்குவதை நிறுத்தி இருக்கிறோம் என்று ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட்டு மாநில அரசுகளுக்கு வேக்சின் வழங்க வேண்டும். மாநில அரசுகள் இந்த செலவை ஏற்றுக்கொள்ளும் என்று ராஜஸ்தான் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications