சத்தீஸ்கர்: அதிரடிப்படையின் வேட்டையில் அலறி ஓடிய மாவோயிஸ்டுகள்.. 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க ஊடுருவிய மாவோயிஸ்டுகள் 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இம்மாநிலங்களின் மலை பிரதேச ஆதிகுடிகளின் ஆதரவுடன் இத்தனை ஆண்டுகாலம் அரசுடன் மாவோயிஸ்டுகள் யுத்தம் நடத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் கொட்டத்தை பாதுகாப்பு படையினர் அடக்கி ஒடுக்கிவைத்தனர். அத்துடன் மாவோயிஸ்டுகளின் கேடயமாக இருந்த பழங்குடிகளும் பொதுநீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகளுக்கான பதுங்கு தளம் என்பது இல்லாமல் மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிகின்றனர்.
கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது மாவோயிஸ்டுகள் தலை தூக்கினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்தடுத்து நாசகார தாக்குதல்களை நடத்தி சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்க முயன்றனர். சட்டசபை தேர்தலில் பழங்குடிகளை வாக்களிக்க விடாமல் தடுக்கவும் முயற்சித்தனர் மாவோயிஸ்டுகள். ஆனால் நாடு விடுதலைக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் சிக்கிய 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல் முறையாக வாக்குப் பதிவு நடத்தி ஜனநாயகத்தை வெற்றி பெற வைத்தது அரசு இயந்திரம்.
தற்போது லோக்சபா தேர்தலையும் சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் தலை தூக்கக் கூடும் என புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்திருந்தன. இதனையடுத்து எஞ்சிய மாவோயிஸ்டுகள் நடமாடும் மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா, பஸ்தர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினரோ மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தி காடுகளுக்குள் ஓட ஓட விரட்டி அடித்தனர். பாதுகாப்புப் படையினரின் இத்தேடுதல் நடவடிக்கைகளில் மொத்தம் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் உள்ள மாநிலங்களுக்கும் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எல்லை வனப்பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பும் தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications