சத்தீஸ்கர் பஸ்தாரில் இன்று மோடி- Go Back Modi முழக்கத்துடன் காங்கிரஸ் பந்த் அறிவிப்பு- ஏன் தெரியுமா?
பஸ்தார்: மாவோயிஸ்டுகள் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த கோட்டையான சத்தீஸ்கரின் பஸ்தாரில் இன்று பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் சத்தீஸ்கர் வருகைக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சி பஸ்தாரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரின் பஸ்தான் பழங்குடிகள் பகுதி. இதனால் பஸ்தார் பகுதியானது மாவோயிஸ்டுகள் வசம் இருந்தது. தற்போது பஸ்தாரில் இயல்பு நிலைமை திரும்பி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தீவிர பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பஸ்தாரின் ஜக்தல்பூரில், நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை உட்பட ரூ. 26,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.
ரூ.23,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் கிரீன்ஃபீல்டு திட்டமாகும். நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை, ஆலையிலும், துணை மற்றும் கீழ்நிலை தொழில்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பெறச் செய்வதோடு,பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய ரயில் பாதை மற்றும் ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். போரிதந்த் - சூரஜ்பூர் ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் மற்றும் அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தரோகி - ராய்ப்பூர் டெமு ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். தேசிய நெடுஞ்சாலை -43 இன் 'குன்குரி முதல் சத்தீஸ்கர் - ஜார்க்கண்ட் எல்லை பிரிவு வரை'யிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
பிரதமர் மோடியின் பஸ்தார் பயணத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நாகர்நார் என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளது. இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசு ஏற்கனவே கடு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று பந்த் போராட்டம் நடத்தப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்திருந்தார். இதனால் பஸ்தாரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications