சத்தீஸ்கரில் பாஜக அடி தூள்.. 2018ல் விட்டதை 2023ல் கைப்பற்றியது.. காங்கிரஸ் பரிதாப நிலை
ராய்ப்பூர்: தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் 60 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 2023ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதி இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதியும் எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3ஆம் தேதியான இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கடந்த 2000ஆம் ஆண்டில் தான் புதிய மாநிலமாக உதயமானது. அதற்கு முன்பு வரை அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டபி்ன் 2000முதல் 2003ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக அஜீத் ஜோகி இருந்தார்.
சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீண்டகாலம் நட்பு பாராட்டி வந்தபோதும் அஜித் ஜோகிக்கும், ராகுல் காந்திக்கும் இணக்கமான உறவு இல்லை. இதையடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை தொடங்கினார். கடந்த 2016ஆம்ஆண்டு ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை உருவாக்கினார் அஜீத் ஜோகி.
சத்தீஸ்கரில் முதல் சட்டசபை தேர்தல் கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்றது. அங்குச் சட்டசபையில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. அதன் பிறகு தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருந்தது.
2008ஆம் ஆண்டு பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கட்டிலில் அசைக்க முடியாத நிலையில் அமர்ந்திருந்தது.
2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காட்சி மாறியது ஆட்சியும் மாறியது. காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. 90 இடங்களில் 68 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. அதன் வாக்கு வங்கியும் 43 சதவீதமாக அதிகரித்தது. மறுபுறம் பாஜகவைப் பொறுத்தவரை அவர்களால் 33 சதவீத வாக்குகளைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீத வாக்குகளை இழந்த பாஜக, 34 தொகுதிகளிலும் கோட்டைவிட்டது.
மூன்று முறை ஆட்சியில் இருந்த பாஜக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்
சத்தீஸ்கரில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. 5 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்ற வில்லை என்று பாஜக பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. இன்றைய தினம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி முகம் தென்பட்ட நிலையில் நேரம் செல்லச் செல்ல பாஜக முந்தியது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 55தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சியோ வெறும் 33 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசின. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களும் சத்தீஷ்கரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்றாலும் சத்தீஸ்கரில் பாஜக வெற்றிக்கனியை பறித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பறிகொடுத்ததை இந்த முறை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தட்டி பறித்து விட்டது.












Click it and Unblock the Notifications