கல்யாண பரிசு.. ஓபன் பண்ணிய புதுமாப்பிள்ளை சாவு.. பின்னணியில் மனைவியின் முன்னாள் காதலன்!
ராய்பூர்: கல்யாண பரிசாக வழங்கப்பட்ட ஸ்பீக்கர் வெடித்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய மனைவியின் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
சத்தீஸ்கர் அருகே கபீர்தாம் மாவட்டம் சாமாரி கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் ஹேமந்திரா மேராவி என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த ஏப்ரல் 1ம் தேதி கல்யாணம் ஆகி இருக்கிறது.

திருமணத்திற்கும்,திருமண வரவேற்பிற்கும் வந்த நண்பர்கள், உறவினர்கள் பரிசுகளை அதிக அளவு தந்திருக்கிறார்கள். அவற்றை புதுமாப்பிள்ளை மேராவி தன் அண்ணண் ராஜ்குமார் (32) என்பவருடன் பிரித்து பார்த்திருக்கிறார். அதில் ஹோம் தியேட்டர்(ஸ்பீக்கர்) ஒன்று இருப்பதை கண்டு அதனை வீட்டில் பொருத்தி இயக்கினார்.
அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்து காரணமாக வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியே பயங்கர புகை மூட்டமாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி புதுமாப்பிள்ளை மேராவி அவரது அண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். அதேநேரம் இடிபாடில் சிக்கிய 1½ வயது குழந்தை உள்பட 6 பேரை உயிருடன் பத்திரமாக போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார்கள் ஸ்பீக்கரை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது அதில் வெடிபொருள் நிரப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கையில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் செய்த சதி வேலை என்பது தெரியவந்தது..

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சர்ஜூ மார்கம் (33) என்ற அந்த இளைஞர், மணமக்களுக்கு ஸ்பீக்கரை பரிசாக கொடுத்தது தெரிந்தது. போலீசார் இதுபற்றி விசாரித்து கூறுகையில், மேராவியின் மனைவியும், மார்கமும் காதலித்துள்ளனர். ஆனால் மார்கம் திருமணமானவர் என்பதை தெரிந்து கொண்ட அந்த பெண் அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இந்தநிலையில் பெண்ணின் பெற்றோர் அவரை மேராவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மார்கம் புதுமண தம்பதியை பழிவாங்கும் வகையில் அவர்களை குண்டு வைத்து கொலை செய்துவிட முடிவு செய்திருக்கிறார். அதன்படியே திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வெடிப்பொருள் நிரப்பிய ஸ்பீக்கரை அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். திருமணமான சிலநாட்களில் தன் அண்ணணுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளை ஸ்பீக்கரை எடுத்து பிரித்து பாட்டு கேட்க முயன்ற போது வெடித்து பலியாகி உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications