பிறந்தநாள் விழாவில் சீரழிக்கப்பட்ட சிறுமி! கற்பழிப்பா? காதலா? சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் , உண்மையிலேயே பாலியல் வன்கொடுமையா? அல்லது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தாரா? என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிகூறியது சர்ச்சையாகியுள்ளது.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி
கடந்த வாரம் திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் ஏற்பாடு செய்த பிறந்தநாள் விழாவிற்கு சிறுமி சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது

பாலியல் வன்கொடுமை
அந்த பெண் தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசாரிடம் கூறினார்.

போலீசில் புகார்
சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மம்தா கருத்து
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா? எப்படி அழைப்பீர்கள் என போலீசாரிடம் நான் கேட்டேன். இது மோசமான சம்பவம். கைது நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

பெரும் சர்ச்சை
இது உண்மையிலேயே பாலியல் வன்கொடுமையா? அல்லது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தாரா? அல்லது இது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? அல்லது அந்த சிறுமி தாக்கப்பட்டாரா? அல்லது சிறுமியின் காதல் விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியுமா? என போலீசாரிடம் கேட்டேன். ஒரு பையனும் பெண்ணும் காதலில் இருந்தார் நான் எப்படி அதை தடுக்க முடியும்.

கடும் எதிர்ப்பு
அந்த சிறுமி 5ஆம் தேதி உயிரிழந்துள்ளார். போலீசாருக்கு 10-ம் தேதி தகவல் தெரிந்துள்ளது. ஒருவர் 5-ம் தேதி உயிரிழந்துள்ளபோது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளபோது ஏன் 5-ம் தேதியே போலீசில் புகார் அளிக்கவில்லை. நீங்கள் உடலை எரித்துவிட்டீர்கள். இதில் நிபுணத்துவம் இல்லாத மனிதராக, முழுமையான விவரம் தெரியாத நபராக கேட்கிறேன். போலீசார் எப்படி ஆதாரங்களை பெறுவது?' என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நிலையில், அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications