நாடாளுமன்றத் தேர்தல்.. பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.. ஆ.ராசா பேச்சு!
கள்ளக்குறிச்சி: எங்கள் மொழி, எங்கள் கலாச்சாரம், எங்கள் இனம் என்பது வேறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அதேபோல், 2024ல் பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவார் என்றும் ஆ.ராசா கூறியுள்ளார்.
இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.

ஆ.ராசா பேச்சு
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், தமிழ்நாட்டுக்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழிக்கு என்று தனித்த அடையாளம் இருக்கிறது.

தனித்து இருக்கும் தமிழ்நாடு
எங்களை தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள் என்று நான் சொன்னால் டெல்லி வரை அலறுகிறது. இதனால் ராசாவை கைது செய்யுங்கள், ராசா தீவிரவாதி என்று கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர், இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரத்தோடு ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தனித்து இருக்கிறது என்கிறார்கள்.

இந்தியாவிற்கு நல்லதல்ல
அண்மையில் தமிழ்நாடு வந்த ஜேபி நட்டா, நீலகிரி மாவட்டத்திற்கு வந்து பேசும்போது, இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தனித்து இருக்கிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என்று பேசினார். இதே கருத்தை தான் நானும் பேசினேன். ஒரு காலத்தில் திராவிட நாடு, தனித் தமிழ்நாடு என்று கேட்ட போதும், மத்திய அரசுக்கும் இந்திய பாதுகாப்பிற்கும் இடர்பாடு வந்த போது, அதனை பாதுகாக்கும் பொறுப்பில் நாங்கள் தான் இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின்
அதற்கேற்ப போர்க் காலங்களில் இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் கொடுக்காத அளவிற்கு நிதியை திரட்டி கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். கருணாநிதி வைத்து செய்வார். அவரின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூப்பிட்டு வைத்து செய்வார் என்று நிரூபித்து இருக்கிற காரணத்தால், திராவிட தத்துவத்தை உலகிற்கு வழங்கி 2024ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications