இதுதான் எழுச்சி.. 7ம் ஆண்டில் நுழையும் உ.பி. பாஜக.. பெண்கள் பைக் பேரணியை தொடங்கி வைத்து பூரித்த யோகி
உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பைக் பேரணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பெண்கள் பைக் பேரணி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன்(மார்ச் 22) 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் இவரை விட நீண்ட ஆண்டுகள் பதவி வகித்திருந்தாலும், தொடர்ச்சியாக எந்த முதலமைச்சரும் 6 ஆண்டுகள் உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்ததில்லை. இந்த சாதனையை தற்போது யோகி அதித்யநாத்தான் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இதனை சிறப்பாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

அதேபோல நேற்று 'சைத்ரா நவராத்திரி' தொடங்கியுள்ளது. 9 நாட்கள் வரை கொண்டாடப்படும் இந்த விழாவின் தொடக்க நாளான நேற்று உத்தரப் பிரதேசம் விழக்கோலமாக களைக்கட்டியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 வகையான நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் இந்த சைத்ரா நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே இந்த இரண்டு சிறப்பு நாட்களையும் சிறப்பிக்கும் வகையில் பெண்கள் பைக் பேரணியை யோகி ஆதித்யநாத் நேற்று கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.
பெண்களுக்காக அதிகாரத்தை உறுதி செய்ய இது போன்ற நிகழ்வுகள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேரணியில் பெண் காவலர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். பல்ராம்பூரிலிருந்து பேரணி தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்த பேரணி நடத்தப்படுகிறது எனக் கூறியுள்ளனர். மொத்தமாக இரண்டு பேரணிகள் நடைபெறுகிறது. முதல் பேரணி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அதாவது விந்தியாச்சல் தாமில் இருந்து கவுதம் புத்த நகர் வரை நடைபெறுகிறது.

இரண்டாவது பேரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அதாவது தேவிபதன் தாம் முதல் லலித்பூர் வரை சென்று முடிவடைகிறது. இந்த பேரணி மூலம் பெண்களின் திறன் பொது சமூகத்திற்கு தெரிய வரும். மற்ற மாநிலங்களும் இதேபோல பல பேரணிகளை நடத்த முன்வரலாம் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்த சைத்ரா நவராத்திரியில்தான் மகிஷாசுரன் எனும் அரக்கனை துர்கா தேவி வதம் செய்தார். எனவே இது பெண்களின் எழுச்சியை குறிக்கிறது. அந்த வகையில் இந்த நவராத்திரி விழாவின் முதல் நாளில் இப்பேரணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு அதிக அளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தும். இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த பேரணியில் மொத்தம் 15-20 பெண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொத்தமாக 80 - 120கி.மீ தொலைவை கடப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications