குஜராத்தில் சீனா அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு! 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
அகமதாபாத்: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் சீனா - குஜராத் இடையே 3 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
சீனா அதிபர் ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை சென்றிருந்த அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் நிலைக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பகல் 2.20 மணிக்கு வரவேண்டிய விமானம் 2.50க்கு தாமதமாக வந்தது. சீனா அதிபரை மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதல்வர் ஆனந்தி பென் படேல், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங்2 மற்றும் குஜராத் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு
இந்த வரவேற்புக்கு பின்னர் சீனா அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார்.

3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் குவாங்டாங் மாகாணத்துக்கும் குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், குவாங்ஜவ் நகருக்கும், அகமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்திடப்பட்டன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்திடப்பட்டது.

சபர்மதி ஆசிரமம்..
இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி- கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு ஜின்பிங் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும் சென்றார். சபர்மதி ஆசிரமம் குறித்து ஜின்பிங்குக்கு மோடி விவரித்தார்.

சபர்மதி ஆற்று பூங்கா..
இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு இருவரும் சென்று சிறிது நேரம் நடந்தபடியே உரையாடினர். இத்துடன் ஜின்பிங்கின் குஜராத் பயணம் முடிவடைகிறது. பிரதமர் மோடியும், சீனா அதிபர் ஜின்பிங்கும் டெல்லி புறப்படுகின்றனர்.

வரலாறுகாணாத பாதுகாப்பு
சீனா அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் அகமதாபாத்தில் இருக்கும் நிலையில் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் டெல்லியில் நாளை இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

வரலாறு காணாத பாதுகாப்பு
சீனா அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் அகமதாபாத்தில் இருந்ததால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications