குதிரையை தாக்கியதை நிரூபித்தால் எனது கால்களை வெட்டிவிடுங்கள்: பாஜக எம்.எல்.ஏ ஆவேசம்
டேராடூன்: கால் உடைபட்டதாக கூறப்படும் குதிரையை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், தனது கால்களை வெட்டி எடுத்துக்கொள்ளுமாறும், உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி பேட்டியளித்துள்ளார்.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது, வெறி வந்தவர் போல காணப்பட்ட கணேஷ் ஜோஷி, போலீசாரின் லத்தியை பறித்து, ஓங்கி ஓங்கி அடித்ததை போலவும், இதனால் போலீஸ்காரர் அமர்ந்திருந்த குதிரையின் கால்கள் உடைபட்டு ரத்தம் வழிந்தது போலவும் தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றில் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

வழக்கு பதிவு
இதையடுத்து, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் கணேஷ் ஜோஷி மீது டேராடூன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மறுப்பு
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, குதிரையை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், தனது கால்களை வெட்டி எடுத்துக்கொள்ளுமாறும், கணேஷ் ஜோஷி பேட்டியளித்துள்ளார்.

லத்தி வாங்கியது உண்மை
கணேஷ் ஜோஷி கூறியதாவது: எனது ஆதரவாளர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். எனவே போலீசார் ஒருவரின் லத்தியை பிடுங்கி தரையில் ஓங்கி, ஓங்கி அடித்தேன். போலீஸ் அடியில் இருந்து தப்பிக்கத்தான் இப்படி செய்தேன். இதுதான் வீடியோவில் காட்டப்படுகிறது. இதன்பிறகு குதிரையொன்று கால் உடைபட்ட நிலையில் இருக்கும் காட்சியும் வீடியோவில் காட்டப்படுகிறது.

நான் அடிக்கவில்லை
நான் வீசிய லத்தி குதிரையின் காலில் பட்டதாக எந்த வீடியோவும் இல்லை., ஏனெனில் நான் நின்ற இடத்தில் இருந்து குதிரை நின்ற இடம் சற்று தொலைவாகும். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தால் நான் குதிரையை அடிக்கவில்லை என்பது நிரூபணமாகும்.

ஜோடிப்பு
இல்லாத ஒன்றை ஜோடித்து, அரசியல் ரீதியாக பழிவாங்க பார்க்கிறார்கள். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குதிரையின் கால்களுக்கு பதிலாக எனது கால்களை வெட்டி எடுத்துச் செல்லட்டும். பிராணிகள் நல அமைப்பினர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுகிறேன். இவ்வாறு கணேஷ் ஜோஷி தெரிவித்தார்.

சக்சஸ்
இதனிடையே குதிரையின் கால்களில் நடந்த ஆபரேஷன் சக்சஸ் ஆகியுள்ளதாகவும், இருப்பினும், குதிரைக்கு போதிய ஓய்வு தேவை எனவும், கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications