கேரளா நர்ஸ்களை கிண்டலடித்த குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும்: உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: நர்ஸ்கள் குறித்து குமார் விஸ்வாஸ் கூறிய கருத்துக்களை திரும்ப பெறவேண்டும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உம்மன் சாண்டி எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ் கேரள நர்ஸ்கள் குறித்து கூறிய கருத்துக்கள் மாநில மக்களை காயப்படுத்தியுள்ளது. குமார் விஸ்வாஸ் தனது கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்வதுடன் மன்னிப்பு கேட்க அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
குமார் விஸ்வாஸ் தனது பேச்சின்போது, முன்பெல்லாம் நர்ஸ்கள் என்றாலே ஆண்களுக்கு சந்தோஷமாக இருந்தது. காரணம், அவர்கள் பெரும்பாலும் கேரளாவிலிருந்து மட்டுமே வந்தனர் என்பதால். கேரள நர்ஸ்கள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் தங்களது பேஸ்புக்கில் படங்களைக் கூட போட மாட்டார்கள். ஆனால் இப்போது வட இந்திய நர்ஸ்கள் வந்து விட்டனர். அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இளைஞர் காங்கிரஸார் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். விஸ்வாஸின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. கேரள நர்ஸ்கள் சங்கங்கள் பலவும் விஸ்வாஸைக் கண்டித்துள்ளன.
குமார் விஸ்வாஸின் மலையாள எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மலையாள எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சாரா ஜோசப் கடந்த வாரம்தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவர், குமார் விஸ்வாஸ் கமெண்ட்டுக்கு எதிராக கருத்து கூறியுள்ளதோடு, ஆம் ஆத்மி கட்சித் தலைமை குமார் விஸ்வாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
