சிவகங்கையில் போட்டியிட மறுத்த ப.சிதம்பரம்... கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்!
பெங்களூர்: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009 நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ப.சிதம்பரம். மத்திய நிதிஅமைச்சராக உள்ள ப.சிதம்பரம் 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட வில்லை. அதற்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் களமிறக்கியுள்ளார்.

பதவி காலம் முடிவு
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம் கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பு
எனவே புதிதாக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ராஜ்யசபா எம்.பிக்களில் ப.சிதம்பரம் ஒருவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கர்நாடக மாநில காங்கிரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் 2 மேல் சபை எம்.பிக்கள்..
தற்போது கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்ய 46 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் போதும் என்பதால் காங்கிரஸ் சார்பில் 2 மேல் சபை எம்.பிக்களை தேர்வு செய்ய முடியும். 46 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க சார்பில் ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்ய முடியும்.
காங்கிரசில் மீதம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் வாக்குகளுடன் சேர்த்து தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 40 உறுப்பினர்களிடம் ஆதரவு பெற காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளது. அதன் மூலம் காங்கிரஸ் கட்சி 3 மேல் சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.

எஸ்.எம்.கிருஷ்ணா..
எனவே காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, தற்போதைய ராஜ்யசபா எம்.பி. ஹரிபிரசாத் ஆகியோர் ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications