சனாதனத்தை அழிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்! திமுகவையும் விளாசிய பிரதமர் மோடி! என்ன சொன்னார் தெரியுமா
போபால்: சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது. அதனை ஒழிக்க தனா் வேண்டும். அதுபோல் தான் சனாதனமும் என்றார்.

இந்நிலையில் தான் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜக குற்றம்சாட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக தொண்டர்கள் மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சுதந்திரத்துக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக ஆட்சி செய்தது. அது ஊழல் ஆட்சியாக இருந்தது. இதனால் மாநிலம் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் அனைத்து வகையான வளர்ச்சி திட்டங்களையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. யுபிஐ திட்டத்தையும் கடுமையாக விமர்சித்தது. ஆனால் இப்போது யுபிஐ பணப்பரிமாற்றத்தில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
மோடி என்றால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் கூறியது. ஆனால் வறுமை ஒழிக்கப்படவில்லை. மாறாக பாஜக ஆட்சிக் காலத்தில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.
காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கின்றன. இவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸில் ஜனநாயகம் இல்லை. குடும்பம், வாரிசு அரசியலை அந்த கட்சி பின்பற்றுகிறது. செல்வ செழிப்பில் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வலி, வேதனை தெரியவில்லை. எப்போதும் தெரிவதும் இல்லை.

பாஜக ஆட்சியில் ஏழைகள், பெண்கள், நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது'' என பிரதமர் நரேந்தி மோடி பாஜக தொண்டர்கள் மாநாட்டில் பேசினார்.
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சி்ங சவுகான் உள்ளார். விரைவில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியை பாஜக வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி அங்கு நடந்த பாஜக தொண்டர்கள் மாநாட்டில் இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications