சுட சுட “காங்கிரஸ்” வெளியிட்ட லிஸ்ட்.. இன்னும் 5 பேருக்கு பயங்கரவாத தொடர்பு! அதிர்ச்சியில் பாஜக
ஜெய்பூர்: பயங்கரவாதிகளுடனும் கொலையாளிகளுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ், மேலும் 4 பாஜக நிர்வாகிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறி ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் என்ற தையல் கலைஞர் 2 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவையே அதிர வைத்த அந்த கொடூர செயலை செய்த இருவரும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கையில் கத்தியுடன் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர்.

பாஜகவுடன் தொடர்பு
அவர்கள் இருவரையும் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இருவரில் ரியாஸ் அட்டாரிக் என்ற நபர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. சம்பந்தப்பட்ட நபர் பாஜகவின் சிறுபான்மை அணியில் சேர விரும்பியதை அக்கட்சியின் நிர்வாகியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்த வீடியோவும் நேற்று வெளியானது. கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக தலைவர் ஒருவர் கழுத்தில் பாஜக கட்சித்துண்டு அணிவித்த புகைப்படங்களும் வெளியாகின சர்ச்சையை ஏற்படுத்தின.

பாஜகவில் பயங்கரவாதி
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்தது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

அமித்ஷாவுடன் புகைப்படம்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா கூறுகையில், "பாஜகவுக்கும் ஹுசைனுக்கும் இடையிலான தொடர்பையும், அதன் மூலம் அவர் செய்த காரியங்களையும் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். கட்சியில் பயங்கரவாதிகள் இருந்தது குறித்து பாஜக விளக்கவேண்டும். பயங்கரவாதி ஹுசைன் அமித்ஷாவுடன் நிற்கும் புகைப்படமும் உள்ளது. உள்துறை அமைச்சர் ஏன் அமைதியாக இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கையில் எடுத்த காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கப்போவதாகவும் கூறி தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்த பாஜகவிலேயே பயங்கரவாதிகள் அங்கம் வைத்திருப்பதை தேசிய அளவில் விவாதப் பொருளாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாஜகவில் பயங்கரவாதி ஒருவர் உறுப்பினராக இருந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.ஐ.ஏவுக்கு கடிதம்
அதன் தொடர்ச்சியாக இந்த 2 விவகாரங்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டொடஸ்ரா தேசிய புலனாய்வு முகமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக ஜெய்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரியாஸ் அட்டாரி பாஜகவின் உறுப்பினர். இந்த வகை அரசியலைதான் பாஜக நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. பாஜக மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல் முஜாஹித்தீன் தொடர்பு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மேலும் 2 பாஜகவினரின் பெயரை வெளியிட்டு இருக்கிறார். பாஜகவில் அங்கம் வகித்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தாரிக் அஹமது மிர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் நவீத் பாபுவுக்கு ஆயுதம் வாங்கிக்கொடுத்ததாக 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதில் டிஎஸ்பி தேவிந்தர் சிங்கிற்கும் தொடர்ந்து இருந்தது என்றும், ஆனால் பாதியிலேயே விசாரணை நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவு
இதேபோல், கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஐடி பிரிவு உறுப்பினரான துரூவ் சக்சேனா உள்ளிட்ட 10 பேர் மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டார். அதேபோல் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பல்ராம் சிங் என்பவர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் கைதானார். கடந்த 2017 ஆம் ஆண்டு அசாம் பாஜக தலைவர் நிரஞ்சன் ஹோஜாய், அரசு நிதி ரூ.1,000 கோடியை பயங்கரவாத அமைப்பு வழங்கியதற்காக என்.ஐ.ஏ. நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications