சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்.. 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!
டெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. உச்சான கலான் தொகுதியில் பிரிஜேந்திர சிங் களமிறக்கப்பட்டுள்ளார். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். பாஜக ஹரியானாவில் தனித்து போட்டியிடுகிறது. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை அண்மையில் வெளியிட்டது. 31 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட சிறிது நேரம் கழித்து இஸ்ரானா (தனி) தொகுதியில் இருந்து பல்பீர் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஜூலானா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. காரி சம்பாலா தொகுதியில் முன்னாள் முதல்வர் புபேந்தர்சிங் ஹூடாவும், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய்பான் ஹூடால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 31 பேர் கொண்ட முதல் பட்டியலில் 5 பெண்கள் இடம்பெற்றனர்.

இந்நிலையில் 9 வேட்பாளர்களைக் கொண்ட தமது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது. பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங்கை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு எதிராக உச்சனா கலான் தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி உள்ளது.
ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உச்சன கலான் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங்கை களமிறக்கி உள்ளது காங்கிரஸ் கட்சி.
தானேசரில் அசோக் அரோரா, கனாவுரில் குல்தீப் சர்மா, தோஹானாவில் இருந்து பரம்வீர் சிங், தோஷம் தொகுதியில் அனிருத் சவுத்ரி, மேஹாமில் பல்ராம் டாங்கி, நங்கல் சவுத்ரி தொகுதியில் மஞ்சு சௌத்ரி, பாத்ஷாபூரிலிருந்து வர்தன் யாதவ், குருகிராமில் மோகித் குரோவர் ஆகியோரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்தப் பட்டியலின் மூலம், 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மொத்தம் 41 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications