அடடே குஜராத் மாடல்! பாலம் எல்லாம் இடியுதே... ‘40% கமிஷன்’ பாஜக அரசு - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் புதியதாக கட்டப்படுகிற பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவது என்பது தொடர் கதையாகிவிட்டது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, 40% கமிஷன் கொள்ளையடிப்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இப்போது குஜராத் மாடல் கேலிக்குரியதாகிவிட்டது என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
குஜராத் மாநிலத்தின் நெடுஞ்சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் சீரான போக்குவரத்துக்கு உதவியாக இருப்பதாக ஒரு காலத்தில் பேசப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக குஜராத்தின் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழும் சம்பவங்கள் தலைப்பு செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் பருவமழை வெளுத்து கட்டிக் கொண்டிருந்த போது சூரத் பகுதியில் மாநில முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது. இதுதான் ரியல் குஜராத் மாடல் எனவும் நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டது. ரூ118 கோடியில் கட்டப்பட்ட சூரத் பாலம் சில மாதங்களிலேயே ஒரு மழைக்கு கூட தாங்காமல் இடிந்து விழுந்தது என்பது குஜராத்தில் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் ஊழலை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது என்கிறது ஆம் ஆத்மி.
அரபிக் கடலில் உருவான பிபர்ஜோய் புயல் குஜராத்தை தாக்கிய தருணத்தில் மிண்டோலா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 3 பொறியாளர்களை மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் இடைநீக்கம் செய்தார். அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டார். இன்னும் ஒருபடி மேலே போய் அக்ஷய் கட்டுமான நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டிலும் வைத்தார். இந்த நிறுவனம் சூரத்தை தலைமையிடமாகக் கொண்டது. தரமான கட்டுமானப் பொருட்களை கண்டு பாலம் கட்டாமல் மோசடி செய்ததுதான் இடிந்து விழக் காரணம் என விசாரணையில் தெரியவந்ததாகவும் அரசாங்கத்தின் அறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது.
இவை எல்லாம் ஏதோ ஒரு தனித்த சம்பவங்கள் என ஒதுக்கிவிட முடியாது. இவை அனைத்தும் புதியதாக கட்டப்பட்ட பாலங்கள். பொதுமக்கள் பயன்பாட்டுக்கானவை. மோசமாக கட்டப்பட்டதால் தரமற்ற கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டியதாலேயே இடிந்து விழுந்தவை.
கடந்த ஏப்ரல் மாதம் அகமதாபாத் மாநகராட்சியானது, அஜய் இன்ஜினியரிங் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்தது. ரூ44 கோடியில் கட்டப்பட்ட ஹத்கேஸ்வர் பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அந்த பாலத்தையும் மாநகராட்சியே இடித்து தள்ளியது. இது தொடர்பாக அஜய் கட்டுமான நிறுவனத்தின் 4 இயக்குநர்களையும் கூட போலீசார் கைது செய்தனர். அதன் மற்றொரு சார்பு நிறுவனமான எஸ்ஜிஸ் பணியாளர்கள் இருவரையும் கைது செய்தது போலீஸ்.
2021-ம் ஆண்டு அகமதாபாத்தில் இதேபோல ரஞ்சித் பில்ட்கான் நிறுவனம் கட்டிய பாலம், கட்டுமான பணிகள் நடந்த போதே இடிந்து விழுந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதேபோல பல நிகழ்வுகளை பட்டியலிட்டுவிட முடியும் என்கிற நிலைமைதான் குஜராத்தில் இருக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கை கோர்த்துக் கொண்டு பொதுமக்கள் பணத்தை சூறையாடி தரமற்ற பாலங்களை கட்டுவது குஜராத்தில் வாடிக்கையாகிவிட்டது.
குஜராத் மாநில பட்ஜெட்டில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிதி 19% உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது ரூ12,639 கோடி நிதி நகர்ப்புற மேம்பாட்டு பணிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மாநில நிதி அமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு ரூ550 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. மோர்பி பால விபத்தில் 141 பேர் பலியாகி இருந்தது நினைவிருக்கலாம். இத்தனை ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டும் தரமற்ற பாலங்களை கட்டி அரசாங்க பணத்தை கொள்ளையடிப்பதுதான் இப்போதைய குஜராத் மாடலா என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாகும்.
இது தொடர்பாக குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், குஜராத்தில் ஆளும் பாஜக அரசு ஒப்பந்த பணிகளில் 40% கமிஷன் பெறுகிறது. இதுதான் இந்த சீரழிவுக்கு காரணம். இதனைத்தான் ரியல் குஜராத் மாடல் என சொல்லலாம் என்கிறார். இத்தகைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களுக்கு ஊழல்தான் மிக முக்கியமான காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்களும் அடித்துச் சொல்கின்றனர். அதுவும் அண்மைக்காலமாக உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், அரசியல் சார்ந்தவர்களாக இருப்பதால் அரசாங்க பணத்தை கொள்லையடிப்பது அவர்களுக்கு எளிதானதாகவும் மாறிவிட்டது என்பதும் எதிர்க்கட்சிகளின் இன்னொரு குற்றச்சாட்டு.
ஓ! குஜராத் மாடல்!












Click it and Unblock the Notifications