வாரணாசியில் மோடியை வீழ்த்த வியூகம் வகுத்து போராடும் காங்கிரஸ்!
டெல்லி: வாரணாசி தொகுதியில் மோடியை வீழ்த்தி பாஜக அல்லாத வாக்குகள் சிதறாமல் இருக்க ஒருங்கிணைந்த வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறதாம் காங்கிரஸ்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. வதோதராவில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஆனால் வாரணாசியில் மோடியை எதிர்க்கும் வேட்பாளர் யார் என்பதை இன்னமும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. இந்த தொகுதியில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி சார்பில் கைலாஸ் செளராசியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவரை போட்டியில் இருந்து விலக வைக்க காங்கிரஸ் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கெனவே ஆம் ஆத்மி தலைவர் ரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார் .பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை அறிவித்திருக்கிறது.
வாரணாசி தொகுதியில் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் ஒரே கட்சி வேட்பாளருக்கு கிடைக்கும் வகையில் வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறதாம் காங்கிரஸ். இதனால் முலாயம்சிங் யாதவுடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்துப் பார்த்தது. இதனால் இத்தொகுதியில் போட்டியிடும் குவாமி ஏக்தா கட்சியின் அன்சாரியை வாபஸ் பெற வைக்கவும் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது.
எப்படியும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திடுவது என்பது காங்கிரஸ் திட்டமாக இருக்கிறது. ஆனால் ஆம் ஆத்மி, பகுஜன் கைகளில்தான் இதன் வெற்றியும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications