அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்போதே கொரோனா அழிவு ஆரம்பமாகும்- பாஜக எம்பி
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆரம்பித்தாலே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகிவிடும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
ராமர் கோவில் பகுதியில் கடந்த மே மாதம் 11ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.
ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலால் ஜூலை மாதம் மாற்றப்பட்டது பின்னர் திடீரென ரத்து செய்யப்பட்டது இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி பங்கேற்பு
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 250 பேர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் பார்வையிட்ட இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு வரப்பட்டு பூமி பூஜையின் போது பயன்படுத்தப்படும் என்று ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

கொரோனாவை அழிக்கும் ராமர்
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் ஆரம்பித்த உடனேயே கொரோனா வைரஸ் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா. ஆன்மீக சக்தியின் மீதும் கடவுளின் சக்தியும் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமர் கோவில் அயோத்தியில் கட்ட ஆரம்பித்த உடனேயே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார் எம்பி ஜாஸ்கவுர் மீனா.

கொரோனா அரக்கனின் அழிவு
கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநில சட்டசபை சபாநாயகரும் பாஜக தலைவருமான ராமேஸ்வர் சர்மா இதே போல ஒரு கருத்தை கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும் என்று தெரிவித்திருந்தார்.
Recommended Video

அரக்கர்களை அழித்த ராமர்
பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும் என்று சர்மா கூறியிருந்தார். அதே கருத்தை இப்போது கூறியுள்ளார் பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா இன்னும் எத்தனை பேர் என்னென்ன சொல்லப்போகிறார்களோ.












Click it and Unblock the Notifications