கொஞ்ச தூரத்தில் ஏர்போர்ட்.. அப்படியே நெருப்புடன் சரிந்த விமானம்! நேபாளத்தின் மோசமான விபத்து! பகீர்
காத்மண்டு: நேபாளத்தில் ஏடிஆர்- 72 பயணிகள் விமானம் வனப்பகுதியில் விழுந்து மோசமான விபத்தில் சிக்கியுள்ளது. இதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான பயணத்தில் விபத்துகள் ஏற்படுவது அரிதான ஒன்று என்றாலும் கூட, விமான விபத்துகள் ஏற்பட்டால் அதில் உயிர் பிழைப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்றாக மாறிவிடும். அப்படியொரு கொடூர விபத்து தான் நேபாளத்தில் நடந்துள்ளது.
நேபாளத்தில் 72 பேருடன் கிளம்பிய விமானம் ஏடிஆர்- 72 என்ற பயணிகள் விமானம் நேபாளத்தின் பொகாராவில் விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் இதுவரை 68 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளில் மோசமான விபத்து
வனப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியவுடன் அங்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இமயமலை அருகே அமைந்துள்ள குட்டி நாடான நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மிக மோசமான ஒரு விபத்தாக இது அறியப்படுகிறது.

குழந்தைகள்
நேபாளத்தின் மோசமான விபத்தாக அறியப்படும் இது எங்கு நடந்தது எப்படி நடந்திருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த ஏடிஆர்-72 விமானத்தில் மொத்தம் 72 பயணிகள் பயணித்துள்ளனர். இரண்டு குழந்தைகள், நான்கு விமான ஊழியர்கள், மற்றும் 10 வெளிநாட்டவரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். விபத்து நடந்துள்ள இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

15 ஆண்டு பழைய விமானம்
விபத்தில் சிக்கிய இந்த விமானம் 15 ஆண்டுகள் பழமையானது.. நேபாளத்தின் எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம் இப்போது விபத்தில் சிக்கியுள்ளது. ஐரோப்பாவின் பிரபல விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் மற்றும் இத்தாலியின் லியோனார்டோவின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டது இந்த ஏடிஆர் 72 விமானம். எட்டி நிறுவனம், மொத்தம் ஆறு ஏடிஆர் 72 விமானங்களை வைத்துள்ளது. இந்த விமானம் மத்திய நேபாளத்தில் உள்ள பொக்காராவுக்கு விமானம் பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்
இந்த விபத்தில் விமானம் ஏற்கனவே துண்டு துண்டாக உடைந்துவிட்டது. விமான விபத்து தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிகிறது. விபத்து நடந்த போது வானிலை தெளிவாகவே இருந்துள்ளது. மழை அல்லது பனி எதுவும் இல்லை என்பதால் மோசமான வானிலை காரணமாக விபத்து நடக்க வாய்ப்பே இல்லை என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டவர்
இருப்பினும், விபத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.. விபத்து குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக விசாரணைக்குப் பின் அவர்கள் விரிவான அறிக்கையை அளிக்கும்போதே விபத்திற்கான காரணம் தெரியவரும். இந்த விமானத்தில் ஐந்து இந்தியர்கள் இருந்த நிலையில், அவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது தவிர ரஷ்யா, கொரியா, அர்ஜெண்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தாக கூறப்படுகிறது.

ஏர்போர்ட் அருகே சரிந்த விமானம்
விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.. இரு நகரங்களுக்கும் இடையே விமானத்தில் பயண தூரம் வெறும் 25 நிமிடங்கள் தான். எனவே, விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நடந்திருக்கலாம். இந்த விமானம் தரையிறங்க ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் அனுமதி அளித்திருந்த நிலையில், ஏர்போர்ட்டை ஏடிஆர் 72 விமானம் நெருங்கியுள்ளது. ஆனால், தரையிறங்கும் முன்பு மோசமான விபத்து நடந்துள்ளது. விமானம் நடுவானிலேயே தீப்பிடித்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications