இமாச்சலில் கோரத்தாண்டவம் ஆடும் மழை வெள்ளம்! பலி எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு.. மீட்பு பணிகளில் தொய்வு
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 91ஆக அதிகரித்துள்ளது.
மலைகள் சூழ்ந்த மாநிலமான இமாச்சலத்தில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இம்முறை மழை தீவிரமாக இருந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் கண்ணில் படும் அனைத்தையும் அடித்து நொறுக்கி சென்றிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தாக சுமார் ரூ.2,100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜல் சக்தி துறைக்கு மட்டும் ரூ.1,000 கோடியும், பொதுப்பணித்துறைக்கு ரூ.890 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கவும் முடியாமல் பேரிடர் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். ஏனெனில் வெள்ளம் காரணமாக சுமார் 1,110 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மண்டலத்தின் கீழ் 355 சாலைகளும், ஹமிர்பூர் மண்டலத்தின் கீழ் 23 சாலைகளும், காங்க்ரா மண்டலத்தின் கீழ் 39 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டாலும் தொடர் மழை புதிய சாலைகளை அடித்து சென்றுவிடுகிறது.
அதேபோல மாநிலம் முழுவதும் பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீரை கொண்டு செல்லும் ராட்சத பைப்புகள் சேதமடைந்துள்ளதால் மலை பகுதிகளில் குடிநீரை கொண்டு சேர்ப்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது. மேலும், பாதாள சாக்கடை அமைப்புகளும் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளது. எனவே சாலைகளிலும், ஆறுகளிலும் கழிவு நீர் நேரடியாக கலக்கப்படுகிறது. இந்த மொத்த பாதிப்புகளை சரி செய்ய நீண்ட காலம் ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தை பொறுத்த அளவில் இந்த கனமழை காரணமாக சுமார் ரூ.103 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மின் வயர்கள் அறுந்துள்ளன. மின் கம்பங்கள் வேரோடு சாந்திருக்கிறது. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளதால் அதை முழுவதுமாக மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இமாச்சலை பொறுத்த அளவில் அடுத்த சில வாரங்களுக்கு மின்சாரம் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதேபோல தோட்டக்கலை துறையிலும் சுமார் ரூ.75 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இதுவரை 1,764 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 636 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 1,128 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மாநிலம் முழுவதும் 91 பேர் பலியாகியுள்ளனர். சிம்லா மாவட்டத்தில் 25, குலு மாவட்டத்தில் 27, சம்பாவில் 12, சோலனில் 7, ஹமிர்பூரில் 5, சிர்மூரில் 4, பிலாஸ்பூர் மற்றும் கின்னார் மாவட்டங்களில் 3-3, உனா மற்றும் மண்டியில் 2-2, காங்க்ராவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாநிலம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சுகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications