வேலையை காட்டும் பாஜக : எடியூரப்பாவை ‘ஏறக் கட்டியது’ போல இப்ப ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முகமாக திகழ்ந்து வரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜகவின் மேலிடமே ஓரம்கட்டி ஒதுக்கி வைத்திருப்பது; தேர்தலில் போட்டியிட சீட் தராமல் இருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின் அக்கட்சி புதிய வியூகம் ஒன்றை கடைபிடித்தது. பாஜகவின் மூத்த தலைவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அத்தனை பேரையும் ஒரே அடியாக ஓரம்கட்டி மூலையில் உட்கார வைப்பதுதான் அந்த வியூகம்.

அத்வானிக்கு நேர்ந்த கதி: இந்த வியூகத்துக்கு பாஜக எனும் கட்சியை அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து நிறுவிய எல்.கே.அத்வானியும் இரையாகிப் போனதுதான் துயரம். பாஜக எனும் கட்சியின் பெரும் அடையாளமாக, பாஜகவை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க எத்தனையோ யாத்திரைகளை நடத்திய அத்வானி அவமானப்படுத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டார். 1996-1998 காலத்தில் அத்வானி சென்னைக்கு ரயிலில் வந்த போது அவரை வரவேற்க 5,6 பேர்தான் நின்றிருந்த காட்சிகளுக்கு செய்தியாளனாக நானும் சாட்சி. அப்படியான நிலையிலும் பாஜகவை வளர்க்க அரும்பாடு பட்ட அத்வானிக்கே அந்த கதி எனில் இதர மூத்த தலைவர்களுக்கு சொல்லவா வேண்டும்?
ஓரம் கட்டப்பட்ட எடியூரப்பா: அண்மையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகாதான். அம்மாநிலத்தில் பாஜகவை வேர்பிடிக்கச் செய்து அரியணை ஏற்றிய பெருமை எடியூரப்பாவுக்குதான் உண்டு. ஆனால் வயது, முதுமை இதனை காரணம் காட்டி அவரை முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றியது பாஜக. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போதும் எடியூரப்பாவை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி தூர உட்கார வைத்தது டெல்லி பாஜக மேலிடம். இப்போது ஆறுதலுக்காக பாஜகவின் மத்திய குழுவில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
நீளும் ஒதுக்கப்பட்டோர் பட்டியல்: இதே வரிசையில்தான் ராஜஸ்தான் மாநிலத்தின் வசுந்தர ராஜே சிந்தியா, சத்தீஸ்கரின் ரமன் சிங்.. இப்போது மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். பாஜக ம.பி.யில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்து நிற்க பிரதான காரணகர்த்தாக இருப்பவர் சிவராஜ் சிங் சவுகான். சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் எங்கே போனார் என தேடும் நிலையை டெல்லி பாஜக மேலிடம் இயல்பாகவே உருவாக்கி வைத்துவிட்டது.
தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்கியா பெயரும் கூட இருக்கிறது. ஆனால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயர்தான் இல்லை. அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மறுக்கிறது பாஜக மேலிடம் என்கின்றன தகவல்கள். அவருக்கு பதில் இப்போது கைலாஷ் விஜயவர்கியா முன்னிறுத்தப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது. அதாவது சிவராஜ் சிங் சவுகானின் அரசியல் அத்தியாயத்தை பாஜக மேலிடம் வலிந்து முடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம்.
சிவராஜ் சிங் சவுகான் கருத்து: இது தொடர்பாக கருத்து தெரிவித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜகவில் மூத்த தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது பாஜகவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறது என்று பட்டும்படாமல் உள்ளுக்குள் இருக்கிற வேதனையை மறைத்துக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார். இந்த 'ஒதுக்கல்' பட்டியலில் யார் எப்போது இணைக்கப்படுவார்களோ? டெல்லியாளர்களுக்கே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications